31 ஆண்டுகாலம் நீதிக்காக போராடிய சென்னை உயர்நீதிமன்றத்திலேயே! வழக்கறிஞரானார் பேரறிவாளன்!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன், தான் 31 ஆண்டுகளாக விடுதலைக்காகவும் நீதிக்காகவும் போராடிய சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறைப்படி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இதனால் அவரது தாய் அற்புதம்மாள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், தனது விடுதலைக்காகவும் நீதி கிடைக்க வேண்டியும் 31 ஆண்டுகள் போராடினார்.

அவரது தாய் அற்புதம்மாளும் வயதான காலத்தில் தனது மகனின் விடுதலைக்காக கோர்டு படிகளில் பலமுறை ஏறி இறங்கினார். சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்குகள் நடந்தன.
இந்த நிலையில் எந்த நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் விடுதலைக்காக ஏறி இறங்கினாரோ, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். ஆம் தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் அவர் முறைப்படி பதிவு செய்து கொண்டார்.

எந்த நீதிமன்றத்தில் அவரது வழக்கிற்காக போராடினாரோ அதே நீதிமன்றத்தில் மற்றவர்களுக்காக பேரறிவாளன் வாதாட போகிறார். சிறையில் இருந்த போதே பேரறிவாளன் பல்வேறு பட்டயப் படிப்புகளை படித்திருந்தார். தகவல் தொழில்நுட்பம், சட்டப் படிப்புகளில் சிறந்து விளங்கினார்.
விடுதலையான பிறகு தனது சட்டப் படிப்பை முழுமையாக படித்து தற்போது அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞராகியுள்ளார். சிறையில் இருந்து வரும் தனது மகனின் எதிர்காலம் குறித்து தனியொருவராக போராடியவர் தாய் அற்புதம்மாள். மகனை அறிவு அறிவு என அழைக்கும் அவர், தனது மகன் கவுரவமான தொழிலைச் செய்ய வேண்டும் என அவர் கண்ட கனவு தற்போது நனவாகிவிட்டது. வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு அற்புதம்மாளுடன் பேரறிவாளன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. பேரறிவாளனுக்கும், தாய் அற்புதம்மாளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன.
யார் இந்த பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதியானது. ஏற்கனவே நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது. ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன்,ஜெயக்குமார் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு 7 தமிழரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி கோகாய் பெஞ்ச் தீர்ப்பளித்தது.
2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீதுதான் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் பேரறிவாளன் தம்மை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழக அரசின் 2018-ம் ஆண்டு தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் ஜனாதிபதி முடிவுக்கு அனுப்பியது ஏன்? என காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உண்டு எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் மத்திய அரசோ, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேரை விடுதலை செய்வது மத்திய அரசின் கைகளில்தான் என திரும்ப திரும்ப வாதிட்டது. இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தமிழக அரசும் ஏற்கனவே 9 மாதங்களுக்கும் மேலாக பரோல் வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்தனர்.













Click it and Unblock the Notifications