நாங்கள் தவறு செய்யவில்லை.. பிரியங்கா காந்தியிடம் சொன்னது என்ன? விடுதலைக்கு பின் நளினி கண்ணீர் பேட்டி
சென்னை: நாங்கள் தவறு செய்யவில்லை என்பது எங்களுக்கு தெரியும், அதனால் நாங்கள் முயற்சி செய்து கொண்டே இருந்தோம், இப்போது விடுதலை அடைந்தது மகிழ்ச்சி என்று நளினி பேட்டி அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நளினி
இந்த நிலையில் நளினி தற்போது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டு அழுதுவிட்டேன். இப்போதுதான் அமைதி ஆகி இருக்கிறேன். நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. 32 வருடம் ஆகியும் தமிழ் மக்கள் எங்களை மறக்கவில்லை. பலர் நாங்கள் தவறு செய்தோம் என்று நினைத்தார்கள். பலர் நாங்கள் தவறு செய்யவில்லை என்று. நினைத்தார்கள் இப்போது நீதி கிடைத்து உள்ளது.

தவறு செய்யவில்லை
நாங்கள் தவறு செய்யவில்லை என்பது எங்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் முயற்சி செய்து கொண்டே இருந்தோம். இதற்காக போராடிக்கொண்டே இருந்தோம். உண்மை வெல்லும் என்று நம்பினோம். என் வீட்டுக்காரரின் துன்பங்களுக்கு இப்போதுதான் முடிவு வந்துள்ளது. அவர் அவரின் குடும்பத்தோடு சேர வேண்டும். 20 வயதில் ஜெயிலுக்கு வந்தோம். எல்லாம் மாறிவிட்டது.

பிரியங்கா காந்தி
இத்தனை வருடம் எனக்காக என் மகள் காத்து இருந்தாள். அவளை பார்த்தே பல வருடம் ஆகிறது. எல்லாம் சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு மிக்க நன்றி. நாங்கள் பல கொடுமைகளை அனுபவித்தோம். எங்களை சிலர் மோசமாக நடத்தினார்கள். எங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி. என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன். நாங்கள் தவறு செய்யவில்லை.

உண்மை என்ன?
பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்த போது வழக்கு பற்றி கேட்டார். நாங்கள் தவறு செய்யவில்லை என்ற உண்மையை பிரியங்கா காந்தியிடம் கூறினோம். அதற்கு பிரியங்கா காந்தி சொன்ன பதிலை இங்கே சொல்ல முடியாது. எங்களை விடுதலை செய்யும்படி பிரியங்கா,சோனியா , ராகுல் சொல்லி இருந்தால்.. அதற்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்கிறேன். தற்போது அந்த உண்மை வெளியாகி உள்ளது. நாங்கள் 26 பேரும் மொத்தமாக விடுதலை ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொலை
இந்த சட்ட போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராடினோம். பேரறிவாளனுக்கு அவரின் அம்மா பெரிய உதவி செய்தார். எங்களுக்கு அப்படி இல்லை. அவரின் அம்மாவின் போராட்டம் விடுதலையில் முக்கிய பங்கு வகித்தது. கொலையே செய்யாமல் சிறையில் இருப்பது மிகப்பெரிய தண்டனை. அதை எல்லாம் நினைத்து பார்க்கவே முடியாது. அந்த கஷ்டங்களை தாண்டி வந்ததே மிகப்பெரிய போராட்டம், என்று நளினி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Source: நியூஸ்18 தமிழ்நாடு












Click it and Unblock the Notifications