ராஜ்குமாரை மீட்க ஓடி வந்தோமே.. டிகே சிவகுமார் இப்போ வந்து தலையிடாதீங்க என்கிறாரே: பழ.நெடுமாறன்
சென்னை: கர்நாடகாவில் 3 தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கோ இப்பிரச்சனையை உடனடியாக கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மூத்த தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

இதனிடையே செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில முதல்வர் டிகே சிவகுமார், "இந்திய கூட்டாட்சியில் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிட உரிமை இல்லை. இந்த அடிப்படை விதியைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் பேசக் கூடாது.
டிகே சிவகுமார் பதிலடி
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என எங்களுக்குத் தெரியும். அவர்களது (தமிழக தலைவர்கள்) வேலையை அவர்கள் பார்க்கட்டும். எங்களது வேலையை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் அவர்கள் தலையிடக் கூடாது. அவர்கள் சொல்லி வரும் கருத்துக்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.
பழ.நெடுமாறன் கண்டனம்
சிவகுமாரின் இந்த பேச்சு, தமிழக தலைவர்களிடம் மீண்டும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. இந்நிலையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சிவகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்,. இதுகுறித்து பிரத்யேகமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதை தமிழ்நாட்டு முதல்-அமைச்சரும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள்.
இதுவொரு மனிதநேயப் பிரச்சனை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
கன்னட நடிகர் ராஜ்குமார்
2000-ம் ஆண்டில் கர்நாடக எல்லைக்குள் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி கர்நாடக காட்டுக்குள் சிறை வைத்தபோது, அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா, மூன்று முறை தமிழகத்திற்கு ஓடோடி வந்து அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் ராஜ்குமாரை மீட்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அப்போது வீரப்பன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய செய்தியில் 'நெடுமாறனை அனுப்பினால் பேசுவதற்குத் தயார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கிணங்க தமிழக முதல்-அமைச்சர் என்னை வேண்டிக்கொண்டபடியும், கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா என்னை அழைத்து என்னிடம் வேண்டிக்கொண்டபடியும், நானும், நக்கீரன் கோபால், கொளத்தூர் மணி, பேரா.கல்யாணி, சுகுமார் ஆகிய தமிழர்கள் காட்டுக்குள் சென்று ஐந்து நாட்கள் வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப்பின் நடிகர் ராஜ்குமார், அவர் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரை விடுவித்துப் பத்திரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்.
மனிதநேய செயல்பாடு
அந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது, "இது எங்கள் மாநிலப் பிரச்சனை; தமிழர்கள் எதற்காக வருகிறீர்கள்?" என்று யாராவது கேட்டார்களா? அன்று நாங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டிருக்காவிட்டால், இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள் மூண்டெழுந்து விரும்பத்தகாத நிகழ்ச்சிகள், படுகொலைகள் நடைபெற்றிருக்கும்.
எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதை திரையிட்டு மறைக்க கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது. முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.
தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை
தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மாந்தநேயம் கொண்டவர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கோ இப்பிரச்சனையை உடனடியாக கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்." என்று கேட்டு கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
