ராஜ்யசபா சீட்.. மநீம, தேமுதிகவை 'நடுத்தெருவில்' அம்போவென தள்ளிவிடும் திமுக, அதிமுக? குஷியில் பாஜக!
சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுமே தயக்கம் காட்டுவதால் மிகப் பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்த மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகியவை பெரும் ஏமாற்றத்தில் தத்தளிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் முடிவடைவதால் ஜூலை மாதம் இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

திமுக அணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் வில்சன், புதுகை அப்துல்லா, தொமுக சண்முகம் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது; அதிமுகவால் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்ட அக்கட்சியின் சந்திரசேகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவி காலமும் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்.பிக்கள் ஆதரவு தேவை.
தமிழக சட்டசபையில் கட்சிகள் பலம்:
திமுக 134
காங்கிரஸ் 17
விசிக 4
இ.கம்யூ-2
மார்க்சிஸ்ட்- 2
அதிமுக - 62 (66 பேரில் 4 பேர் நீக்கம்)
பாமக- 5
பாஜக 4
இதனடிப்படையில் 4 ராஜ்யசபா எம்பிக்கள் திமுகவுக்கு உறுதியாக உள்ளது; அதிமுகவுக்கு கடந்த காலத்தில் பாஜக, பாமக ஆதரவு இருந்ததால் 2 எம்பிக்கள் கிடைத்தனர்; தற்போது பாஜக, பாமக ஆதரவு இல்லாததால் 1 எம்பி உறுதியாகி இருக்கிறது.
கமல்ஹாசனுக்கு சீட் இருக்கிறதா? இல்லையா?
திமுக அணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அதிமுக அணியில் தேமுதிகவுக்கும் தலா 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது மநீமவுக்கு திமுக சீட் ஒதுக்குமா என்ற கேள்வியும் விவாதமும் நடைபெற்று வருகிறது. அண்மையில் மநீம தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ராஜ்யசபா சீட்டை விட்டுத் தருமாறு கமல்ஹாசனிடம் பேசியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இதனால் மநீம தரப்பில் கடும் குமுறல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு கிடைத்துவிடுமா?
அதேபோல அதிமுகவில் 1 ராஜ்யசபா எம்பி பதவி உறுதியாக கிடைக்கும் நிலையில் அதை தேமுதிகவுக்கு விட்டுத் தருவதா? என்கிற கேள்வியையும் அக்கட்சி தலைமை எழுப்புவதாகவும் கூறப்படுகிறது. இதை உணர்ந்துதான், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக உறுதி அளித்திருந்தது என முந்திக் கொண்டு பேட்டி கொடுத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா. அவரைப் பொறுத்தவரை மகன் விஜய பிரபாகரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியாக வேண்டும் என்பதில் அதிதீவிரமாக இருக்கிறார்.
திமுகவின் 4-வது சீட் எந்த கூட்டணிக்கு?
திமுக அணியில் காங்கிரஸ் கட்சியும் ஒரு எம்பி பதவியை கேட்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தற்போது எம்பியாக உள்ள புதுகை அப்துல்லா, வில்சன் இருவரும் மீண்டும் பதவியை பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுகவோ தமது பார்முலாவின் படி சட்டத்துறையில் ஒருவர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தொமுசவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு பதவி கொடுப்பதை உறுதி செய்துள்ளது. 4-வது சீட்டை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கே மீண்டும் தருவதா? மநீமவுக்கு கொடுத்து கமல்ஹாசனை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைப்பதா? சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டு காங்கிரஸுக்கு ஒரு சீட்டை கொடுப்பதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ராஜ்யசபா 1 சீட்டுக்கு தேர்தலா?
மேலும் திமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்பி பதவியும் அதிமுகவுக்கு 1 எம்பியும் உறுதியான நிலையில் எஞ்சிய 1 ராஜ்யசபா சீட்டுக்கு தேர்தல் நடத்தும் சூழ்நிலையும் உருவாகும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். திமுக, அதிமுக அணியில் ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து நடக்கும் இந்த ஊசலாட்டங்களை உன்னிப்பாகவும் குஷியாகவும் கவனித்து கொண்டு வருகிறதாம் பாஜக.












Click it and Unblock the Notifications