"99% பாமகவினர் என்னுடனே உள்ளனர்.. அன்புமணியின் பொய்யும் புரட்டும் எடுபடாது" - ராமதாஸ் பேட்டி
சென்னை: அன்புமணி பாமகவின் உறுப்பினராக கூட இல்லை, அவருக்கு எந்த உரிமையும் இல்லை, 99% பாமகவினர் என்னுடனே உள்ளனர், அன்புமணியின் பொய்யும் புரட்டும் எடுபடாது என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பெரியாரின் 52 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக செயல்தலைவர் ஸ்ரீ காந்தி பரசுராமன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழுவை நடத்த முடியாது' என அன்புமணி கூறியுள்ளது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், அன்புமணி பேசுவது பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. 100க்கு 99 சதவீதம் பாமகவினர் என்னுடன் இருக்கின்றனர். பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் பொய்யும் புரட்டும் எடுபடாது. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுவிட்டார்.
பாமக சார்பில் சேலத்தில் 29 ஆம் தேதி நடத்தப்படும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தெரிவிப்பது கட்சியிலேயே அவர் இல்லை.. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டேன். அவர் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வழிப்போக்கன் சொல்வது போல் உள்ளது" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
