மதுரையில் அமித்ஷா! சென்னையில் ராமதாஸ்! கருணாநிதியை பாராட்டி பேசிய பாமக நிறுவனர்! என்ன சொல்கிறார்?
சென்னை: குருமூர்த்தியை மீண்டும் சந்தித்தது ஏன் என்றும், விரைவில் நல்ல செய்திகள் வரும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது மகள் வீட்டில் தங்கியுள்ள ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் மருத்துவ ஆலோசனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் கவிதா வீட்டிற்கு நேற்றைய தினம் ராமதாஸ் வந்திருந்தார். இந்த நிலையில் இன்று 2ஆவது நாளாக சென்னையில் இருக்கும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் குருமூர்த்தியை தைலாபுரம் தோட்டத்திலும் சென்னையிலும் சந்தித்து பேசினேன். அமித்ஷாவை நான் சந்தித்தது கிடையாது. நல்ல செய்திகள் விரைவில் வரும், அதுவரை நாம் காத்திருக்கலாம்.
வயது
அரசியலுக்கு வயது கிடையாது. இதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் மலேசிய பிரதமர் மகாதிரும் சிறந்த உதாரணங்கள். சக்கர நாற்காலிலேயே அரசியல் செய்தவர் கருணாநிதி. தேசிய அளவில் தலைவர்களுடன் நான் நல்ல நட்பு கொண்டுள்ளேன்.
நெருங்கிய நண்பர்
பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. இன்னும் 2, 3 மாதங்களில் முடிவு கிடைக்கும். புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு எனது வாழ்த்துகள். இதை அவர் கட்சி ஆரம்பித்தவுடனேயே சொல்லிவிட்டேன் என்றார்.
அன்புமணி
அன்புமணியுடன் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு அது ரகசியம் என தெரிவித்தார். வழக்கத்தை விட ராமதாஸ் இன்று உற்சாகமாக இருந்தார். Age is just a number என கூறுகிறீர்களே, இதை யாருக்காவது சொல்லும் மெசேஜா என செய்தியாளர் கேட்டதற்கு, "ஆம் நீங்கள்தான் எனக்கு 86 வயதாகிவிட்டது, அவரால் அரசியல் செய்ய முடியாது என சொன்னீர்களாமே" என கிண்டலாக பேசினார்.
பாமக நிறுவனர்
பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு வெடித்துள்ள நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
தைலாபுரத்தில்
அதே வேளை கடந்த 16 ஆம் தேதி முதல் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன் முகுந்தன், ராமதாஸை சந்தித்து பேசினார்.
பாமக இளைஞரணி செயலாளர்
முகுந்தனை, பாமக இளைஞரணி செயலாளராக நியமித்ததால்தான் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் மோதல் வெடித்தது. இதனால் முகுந்தன், அந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் ராமதாஸிடம், முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அது முடிந்து போன விஷயம், நடக்க போவதை பேசுங்கள் என தெரிவித்தார். ஆனால் இன்றைய தினம் முகுந்தனும் ராமதாஸும் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாதான முயற்சி
ராமதாஸும் அன்புமணியும் சமாதானமாக செல்ல வேண்டும் என அரசியல் கட்சியினர் விரும்புகிறார்கள். இவர்களை சமாதானப்படுத்த கடந்த 5ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து நேற்றும் சந்தித்து பேசியிருந்தனர். அது போல் சைதை துரைசாமியையும் சந்தித்து பேசியிருந்தனர். ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதால் இவர்களது இரு முறை நடந்த சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications