விசாரிக்க வந்த எடப்பாடி பழனிசாமி கையைப் பிடித்து அருகில் அமர வைத்து ‘ஜோக்’ அடித்த ராமதாஸ்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையைப் பிடித்து அருகில் அமரவைத்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸும் கிராமம்தோறும் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

அதற்கான தேதி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். இது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
"பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் இருதயம் தொடர்பான மூத்த மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்" என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவர்களிடம், ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
நலம் விசாரிக்க வந்த எடப்பாடி பழனிசாமியை, ராமதாஸ் கையை பிடித்து அமரச் செய்தார். எடப்பாடி பழனிசாமியிடம் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார் ராமதாஸ். மருத்துவர் செங்கோட்டுவேலு கண்ட்ரோலில் தான் இருதயமே இயங்குகிறது என சிரித்தபடி எடப்பாடி பழனிசாமியிடம் கூறினார் ராமதாஸ். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications