நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்..! தம்பி திருமாவளவன்-க்கு ராமதாஸ் எழுதிய கடிதம்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்படுவது தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உடனடியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இன்னும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழலில், விசிகவின் முடிவு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
பாஜக - பாமக நிலைப்பாடு தெளிவு
ராமதாஸ் தனது அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் பாமக தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை முழுமையாக மதிப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, ஆட்சி அமைப்பதற்கான எந்த முயற்சியிலும் பங்கேற்க விரும்பவில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் தெளிவாக அறிவித்துள்ளார். மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவது அனைவரின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.
திருமாவளவனுக்கு நேரடி அழைப்பு
ராமதாஸ் தொல்.திருமாவளவனை "தம்பி" என்று அழைத்து, தவெகவுக்கு உடனடியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அரசியலில் பாடுப்படும் விசிக, இந்தச் சந்தர்ப்பத்தில் தவெகவுக்கு ஆதரவு அளித்தால் புதிய ஆட்சி அமைந்து தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருமாவளவன் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆளுநர் குறித்து விமர்சனம்
ராமதாஸ் அறிக்கையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காதது உள்நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்துள்ளார்.
திருமாவளவன் எங்கே?
இதேவேளையில் விசிக தலைவர் திருமாவளவன் எங்கே என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து, இன்று காலை முடிவுகளை அறிவிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் விசிக தரப்பில் எவ்விதமான அப்டேட்-ம் இல்லை.
இந்த நிலையில் நேற்றிரவு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திரும்பிய திருமாவளவன் வேளச்சேரி வீட்டிற்கு செல்லாமல், ஹோட்டல் தங்கியுள்ளார். ஆனால் தற்போது அந்த ஹோட்டலிலும் திருமாவளவன் இல்லை. இதனால் விசிக தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.















Click it and Unblock the Notifications