ரேஷன் + ஆதார் + ஆஃப் லைன்.. ரூ. 1000 உரிமை தொகை திட்டம் முகாம்களில்.. என்ன நடக்கிறது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன.

1. எல்லா மாவட்டங்களும் கிட்டத்தட்ட 500 முகாம்களை கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் முகாம்கள் பள்ளிகளில் உள்ள மைதானங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கூட்டங்களை சமாளிக்க முடிகிறது.
2. முகாம்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகவே கல்லூரி, பள்ளி வளாகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
3. இந்த முகாம்களை தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் உடனடி ஆய்வு செய்து வருகின்றனர். முகாம்கள் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
4. இந்த முகாம்களில் ரேஷன் கார்ட் அவசியமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ஆதார் சீடிங் செய்ய ஆதார் கார்டு , அதோடு இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பர் அவசியமாக கேட்கப்படுகிறது. இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படுகிறது.
5. பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சர்வர் டவுன் ஆக உள்ள பட்சத்தில் ஆப் லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
6. ஏற்கனவே விண்ணப்பத்தை பெண்கள் பூர்த்தி செய்துள்ளனர். அதேபோல் டோக்கனில் நம்பர் இருப்பதால் நேராக குறித்த நேரத்திற்கு வந்து ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறைகள் எளிதாக உள்ளன. அதனால் பெரிய அளவில் கூட்ட நெரிசல்கள் இல்லை.
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரமாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன.
இந்த டோக்கனில் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும்.
ஸ்டாலின் தீவிரம்: இந்த திட்டம் பற்றி போஸ்ட் செய்திருந்த முதல்வர் ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.
#கலைஞர்100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications