ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. 3 நாட்கள் வீடு தேடி வரும் பொருட்கள்! யாருக்கெல்லாம் இந்த வசதி?
சென்னை: தமிழகத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படும் இவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழகம் முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன.. இதனால் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக ரேஷன் கடைகள்
ஆனால், வயது முதிர்ந்தவர்கள் நீண்ட நேரம் ரேஷன் கடையில் நின்று பொருட்களை வாங்குவது சிரமமாக உள்ளது.. . குறிப்பாக நடக்க முடியாமல் இருக்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு செல்வதே சிரமமானதாக இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்கு நேரடியாக வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன் பெறுகின்றனர். அவர்கள் ரேஷன் கடைக்கு செல்லாமல், தங்கள் வீட்டிலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
வீடு தேடி வரும் பொருட்கள்
இந்நிலையில், நாளை அதாவது செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்த சிறப்பு விநியோகம் நடைபெறுகிறது. ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த 19 மண்டலங்களில் செயல்படும் 1,346 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க உள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்கள்
மேலும், கிராமப்புறங்களில் இந்தத் திட்டம் நடைபெறும் நாட்களில் ரேஷன் கடைகளில் வழக்கமான பொருட்கள் வழங்கப்படாது. அந்த நாட்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். எனவே, வழக்கமாக ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் செப்டம்பர் 5, 7, 8 ஆகிய தேதிகளுக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு அலைந்து செல்லாமல், வீட்டிலேயே பொருட்களை பெறுவதற்கு இந்தத் திட்டம் பெரிய உதவியாக உள்ளது. இந்த வசதியை தகுதியானவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது....!!


Click it and Unblock the Notifications
