ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் மனு.. நாளை விசாரணை
சென்னை: சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் மது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலமாக தமிழகம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

குறிப்பாக புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் மதுபானக் கடைகளை முற்றிலும் மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும், பூரண மதுவிலக்கு என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் எனவும் எனவும் ஆளும் கட்சி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், ரேஷன் கடைகளில் மதுவிற்பனையை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தோர் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்துகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் சில குறிப்பிட்ட மதுபானங்களை மட்டுமே விற்கிறது.
எனவே, மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications