நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் எடப்பாடியார்.. ஏளனம் வேண்டாம்.. அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!
சென்னை : எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பற்றி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏளனமாகவும், ஏகடியமாகவும் பேசியிருப்பது சர்வாதிகாரமானது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், ஈபிஎஸ்ஸால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசின் அலட்சியங்களை, தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் தார்மீக உரிமை. அதற்கு முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் விளக்கம் தருவது தார்மீக கடமை எனச் சுட்டிக்காட்டியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
வேதாந்தா - பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்திலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவில் முதலீடு செய்தது பற்றி தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது அறிக்கை அரைகுறை அறிக்கை என விமர்சித்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

எடப்பாடி பழனிசாமி
வேதாந்தா - பாக்ஸ்கான் நிறுவன முதலீடு தமிழகத்திற்கு கிடைக்காதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிக்கையில், தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசு தனது ஆணவத்தாலும், அலட்சியத்தாலும், 'எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்' என்ற ஆக்டோபஸ் குணத்தாலும் விரட்டி அடித்துள்ளது. தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இந்த ஆட்சியாளர்களின் அகோரப் பசியால் கைநழுவி போனதன் விளைவாக, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த விடியா அரசு." எனத் தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசு
அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அறிக்கை விடுத்திருந்தார். அதில், அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டுள்ளார். வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவதற்கான இசைவினை வழங்க மறுத்துள்ளது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப்படை விவரம் கூட அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை எனச் சாடியிருந்தார் தங்கம் தென்னரசு.

ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி தரப்பால் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிர்வாக குளறுபடிகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு. அதற்கு முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் விளக்கம் தருவது தார்மீக கடமை.

திமுக அரசின் நிர்வாக குளறுபடி
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வேதாந்தா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றுவிட்டன. இதன் மூலம் இரண்டு லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை நாம் இழந்தோம் என்று தி.மு.க அரசின் நிர்வாக குளறுபடிகளை சுட்டிக்காட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தெளிவான விளக்கத்தைச் சொல்லாமல் குழப்பமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

உண்மை நிலை இதுதான்
குறிப்பாக, வேதாந்த நிறுவனத்துக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணங்களுக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான இசைவினை வழங்க மறுத்திருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் மின் வாகன உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவ பரிசீலிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இதன்மூலம் தொழில் தொடங்கவில்லை என்பது உண்மை நிலையாகும்.

சர்வாதிகார போக்குடன் பதில்
அரசின் அலட்சியங்களை, தவறுகளை சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர், நிர்வாகம் தெரியவில்லை' என்று ஏளனமாகவும், ஏகடியமாகவும் பேசியிருக்கிறார். வேதாந்தா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை என்பதை நடுநிலை நாளிதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. அமைச்சரும் இதைப் படித்திருப்பார். இது தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியிருப்பததை சுட்டிக்காட்டியிருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார். ஆனால், உரிய விளக்கம் தராமல், சர்வாதிகார போக்குடன் ஜனநாயகத்துக்கு விரோதமாக பதிலளித்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர்.

48 ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கை
48 ஆண்டுகால அரசியல் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்து அரசியலில் எந்தப் பின்புலமும் இல்லாமல் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி சாமான்ய முதல்வராய் கடந்த நான்கரை ஆண்டுக்காலம் சரித்திர சாதனை படைத்து, பல திட்டங்களை உருவாக்கி, மாணவர்கள், விவசாயிகள், தாய்மார்கள், தொழிலாளர்கள் என மக்கள் போற்றும் தலைவராக எடப்பாடியார் உள்ளார்.

அதே மக்கள் தான் எங்களையும்
மக்களின் கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசின் அவலங்களையும் அரசின் கவனத்துக்கு தார்மீக அடிப்படையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கொண்டு வருகிறார். அதற்கு முதலமைச்சர் பதில் கூறுவதில்லை, கேள்வி கேட்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளது. அதற்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் பதில் கூறுவதுதான் அரசியல் நாகரிகம் ஆகும். ஆளுங்கட்சியாக உங்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான், எங்களையும் எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications