ரியல் எஸ்டேட் நெருக்கடி! கட்டுமான பொருட்கள் பல லட்சம் உயர்வு! கனவாகும் கனவு இல்லம்? அரசு தீர்வு என்ன
சென்னை: தமிழகத்தில் கடுமையான கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் கட்டுக்கடங்காத விலை உயர்வு காரணமாக, லட்சக்கணக்கான பொதுமக்களின் இந்த இல்லக் கனவு பாதியிலேயே சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை விவரித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனம், தமிழக முதலமைச்சருக்கு அவசர மற்றும் விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.. அதில், கட்டுமானப் பொருட்களுக்கு நியாயமான மற்றும் நிலையான விலை நிர்ணய முறையை உருவாக்க வேண்டும் என மிக முக்கிய கோரிக்கையும் விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவசர மற்றும் விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழக அரசு சட்டவிரோத கனிமவள சுரண்டல்களை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அனுமதியின்றி இயங்கும் குவாரிகள் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்று பாராட்டி உள்ளார் டாக்டர் ஹென்றி.
பெயிரா வரவேற்பு
எனினும். சட்டவிரோதங்களை ஒழிப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள், முறையாக அனுமதி பெற்று சட்டப்படி வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானத் துறையினர் மற்றும் முதலீட்டாளர்களை கடுமையாக பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்ற கவலையை டாக்டர் ஹென்றி வெளிப்படுத்தியுள்ளார்.
"தற்போது தமிழகம் முழுவதும் மலைமண், சவுடு மண் உள்ளிட்ட அடித்தள நிரப்புப் பொருட்கள் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீட்டு கட்டுமானப் பணிகள் அடித்தள மட்டத்திலேயே பாதியில் நின்றுபோய் கிடக்கின்றன.
வீட்டு கட்டுமானப் பணிகள்
பொதுமக்கள் பலர் வங்கிக் கடனுக்கான மாத தவணையை (EMI) ஒருபுறம் செலுத்திக்கொண்டே, மறுபுறம் கட்டி முடிக்கப்படாத வீட்டைப் பார்த்து வேதனையடைந்து வருகிறார்கள். வாடகை வீட்டுச் சுமை, கட்டுமானக் கடன் சுமை என இரட்டைப் பாதிப்பில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றன.
மறுபுறம், தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கட்டுமான நிறுவனங்கள் வங்கிக் கடன்களுக்கான வட்டி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) விதித்துள்ள காலக்கெடு என பலமுனை அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளன.
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு
அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயருவதால் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தொழிலாளர்கள், பொறியாளர்கள், மேஸ்திரிகள் மற்றும் கட்டுமானப் பொருள் விற்பனையாளர்கள் என லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மலைமண், ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சொந்த வீட்டுத் திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வியலை பாதிக்கும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நியாயமான விலை நிர்ணய முறை
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய குவாரிகளுக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். செயற்கை தட்டுப்பாட்டைத் தடுக்க மாநில அளவிலான சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கு நியாயமான மற்றும் நிலையான விலை நிர்ணய முறையை உருவாக்க வேண்டும்.
கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; ஆனால் அதே நேரத்தில் மக்களின் இல்லக் கனவை சிதைக்கக் கூடாது. சட்டத்தின் ஆட்சியும், மக்களின் நலனும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று டாக்டர் ஆ. ஹென்றி அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, கட்டுமானத் துறையையும் மக்களின் கனவுகளையும் காக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது....!!!












Click it and Unblock the Notifications