உண்மையிலேயே வரவேற்கிறேன்.. அதிமுக பொதுக்குழு தீர்ப்பை பாராட்டிய பாஜக தலைவர்.. அப்போ ஓபிஎஸ் கதி?
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
சென்னை: அதிமுகவில் கடந்த 6 முதல் 7 மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. உண்மையிலேயே இந்த தீர்ப்பை வரவேற்கிறேன் என பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். இந்த வேளையில் ‛‛பாஜகவை நம்பி இருந்த ஓ பன்னீர் செல்வத்தின் நிலை என்ன? என்பது பற்றிய கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
அதோடு இந்த பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அமைந்தது.
இதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை மாதம் 11ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஈபிஎஸ்க்கு கிடைத்த வெற்றி
ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் அவரது நீக்கத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும். மாறாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாஜக கருத்து
இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த உற்சாகமாகி உள்ளார். அதேவேளையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் ஷாக்கில் உள்ளனர். மேலும் ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது அணியினரின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே தீர்ப்பை வரவேற்கிறேன்
இதுபற்றி அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ‛‛6, 7 மாதங்களா நிலுவையில் இருந்த வழக்கு. தெளிவு கிடைக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. பிரச்சனைகளுக்கு ஏதாவது ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்பதும், முந்தைய பொதுக்குழு செல்லும் என்பது தீர்ப்பின் சாராம்சமாக உள்ளது. இறுதி தீர்ப்பு பற்றிய முழுவிபரம் இன்று மாலையில் தான் வரும். உண்மையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்'' என்றார்.

இரட்டை இலை சின்னத்துக்கு தான் ஆதரவு
இந்த வேளையில், பாஜகவை ஓ பன்னீர் செல்வம் நம்பியிருந்தார் என்றாரே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராம சீனிவாசன், ‛‛நாங்கள் ஒன்றும் தீர்ப்பு எழுதவில்லையே. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கொடுத்ததோ அவர்களை ஆதரிக்கிறோம். அதன்படி உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து பொதுக்குழு மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். அதேபோல் இரட்டை இலை யாருக்கு யாருக்கு கிடைக்கிறதோ அவர்களை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய பயன்படுத்தி சென்ற சின்னம் இரட்டை இலை. அந்த சின்னத்தை யாருக்கு ஒதுக்குகிறார்களோ அவர்களை ஆதரிப்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications