அதிரடி திருப்பம்.. இன்பதுரை மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி.. ராதாபுரத்தில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை
Recommended Video
சென்னை: ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு, எதிராக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இதையடுத்து நாளை காலை 11.30 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம். அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர்.
இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். வெறும், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர்
ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து, அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால், அதையே காரணமாக சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.

உயர்நீதிமன்றம் அதிரடி
இந்த நிலையில்தான், 203 தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்று ஹைகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் 19, 20, 21 என கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, தன்னை வெளியே அனுப்பிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டதாக அப்பாவு தெரிவித்தார். எனவே, இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு எந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.

151 வாக்குகள்
முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அலுவலரிடம், அப்பாவு வாக்குவாதம் செய்தார். சரியாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், 151 வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன், என்று தெரிவித்திருந்தார். எனவே ஒருவேளை தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், இந்த அளவுக்கான, வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது.

இன்பதுரை மனு
அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று, இன்பதுரை சார்பில் அன்றைய தினம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பாவுவிற்கு, ஹைகோர்ட் உத்தரவிட்டது. இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்பாவு தரப்பில், வாக்குகள் எண்ணுவதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளதை கருத்தி கொண்டே, நீதிமன்றம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இன்பதுரை மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராதாபுரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு தடை கிடையாது. 203 தபால் ஓட்டுகள் மறுபடி எண்ணப்பட வேண்டும். கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறுபடி எண்ண வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

நாளை வாக்கு எண்ணிக்கை
நாளை காலை 11.30 மணிக்கு கடைசி 3 சுற்றில் பதிவான, வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வழங்கக்கூடிய பதிலைப் பொறுத்து, அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. மேல்முறையீட்டுக்கு இந்த வழக்கு சென்றாலும் கூட வாக்கு எண்ணிக்கைக்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. எனவே நாளை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது உறுதியாகிவிட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவையே மாறக் கூடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications