கொடநாடு வழக்கு முடியும் நேரத்தில்.. மீண்டும் சயனிடம் விசாரணை.. இபிஎஸ் கொதிப்பு.. பரபர பேட்டி!
சென்னை: கொடநாடு வழக்கு முடியும் நேரத்தில் மீண்டும் சயனிடம் விசாரணை நடத்துவது ஏன், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து வருகிறது. கடந்த 2017ல் இங்கு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது.2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். நேற்று கொடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில்தான் இன்று கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே அமர்ந்து விசாரணைக்கு எதிரான தர்ணா போராட்டம் செய்தனர், இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கு குறித்து பேட்டி அளித்தார்.

பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது கொடநாடு வீட்டில் ஓய்வு எடுப்பது வழக்கம். அவரின் மரணத்திற்கு பின் அந்த வீட்டில் கொள்ளை நடந்தது. சயன் மற்றும் கூலிப்படையினர் அங்கு கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்த கொள்ளையில் காவலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் முறையாக வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கு முடியும் தருவாயில் தற்போது இருக்கிறது. இந்த நிலையில் சயனிடம் திமுக அரசு சார்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது.

திமுக வாக்குமூலம்
வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு ரகசியமாக வாக்குமூலத்தை பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் என்னையும், கழக பொறுப்பாளர் சிலரை பற்றியும் வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வந்துள்ளது. இது தவறான புகார். இதை அதிமுக கண்டிக்கிறது. ஏற்கனவே அதிமுக அரசு இதில் முறையான விசாரணை நடத்தி, வழக்கு முடியும் நிலைக்கு வந்துவிட்டது.

சாட்சியம்
முக்கிய சாட்சியம் எல்லாம் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வரும் நிலையில் இப்படி திமுக திட்டமிட்டு வழக்கு தொடுத்து உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக இப்படி செயல்படுகிறது. குற்றவாளிகளிடம் தொடர்ந்து கண்டிப்பு காட்டி வந்தது. ஆனால் அதே குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக செயல்பட்டு வருகிறது. திமுகவிற்கும் அந்த குற்றவாளிகளுக்கும் தான் எதோ சம்பந்தம் உள்ளது. திமுக வழக்கறிஞர்தான் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வந்தார்.

குற்றவாளி
அவர்கள்தான் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஆட்சி மாற்றம் அடைந்தது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது வழக்கு முடியும் போது மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள். குற்றவாளிகளுக்கு முன்பு ஆஜரான அதே வழக்கறிஞர்கள் இன்று அரசு தரப்பில் ஆஜராகி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியான நடவடிக்கை.

சோதனை
அதிமுக இதைவிட பெரிய சோதனைகளை எதிர்கொண்டு இருக்கிறது. அதிமுக ஒற்றுமையாக இந்த வழக்கை எதிர்கொள்ளும். எந்த மோசமான சூழ்நிலையிலும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். திமுக தனது தோல்விகளை திசை திருப்புவதற்காக தற்போது எங்கள் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது, என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வழக்கு பின்னணி
நீலகிரி மாவட்டத்தில் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு பணிகள் செய்யப்படுவது இல்லை. இந்த நிலையில் கடந்த 2017ல் இங்கு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது.2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.இந்த கொலை வழக்கில் பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. இந்த கொள்ளைக்கு பின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்து ஒன்றில் பலியானதும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. சயான், மனோஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு இவர்களுக்கு எதிரான விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications