சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தரப்பில் தமிழக அரசுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாநில நிர்வாகச் செயலாளர் S.பாலாஜி தலைமையில் சமீபத்தில், நடைபெற்றது.
தீர்மானங்கள்: தேசிய துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் சம்பத், மாறன், பிரியாகாந்தன், முருகப்பன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அந்த தீர்மானங்கள் இவைகள்தான்:
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில் முழுமை திட்டங்களை (Master Plan) உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து விரைவில் அனுமதி பெறும் வகையில் தீர்வு காண வேண்டுகிறோம். அதேபோன்று பாரம்பரிய நகரங்களான மேற்கண்ட தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் நகரங்களில் மக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, மேற்கண்ட முழுமை திட்டத்தில் அவைகளை தொடர் கட்டட பகுதியாக (CBA) வகைப்படுத்திட வேண்டுகிறோம்.
பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை நகராட்சியில் தற்போதுள்ள தனித்த உள்ளூர் திட்ட குழுமத்தின் (SLPA) எல்லையை கணிசமாக விரிவாக்கம் செய்து, ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமத்தினை (CLPA) விரைவாக ஏற்படுத்திட வேண்டுகிறோம். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிராம்பட்டினம் மற்றும் திருவையாறு ஆகிய நகராட்சிகளில் புதிய உள்ளூர் திட்ட குழுமங்களை விரைவாக அமைத்திட வேண்டுகிறோம்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகளில் தற்போதுள்ள தனித்த உள்ளூர் திட்ட குழுமங்களின் (SLPA) எல்லையை கணிசமாக விரிவாக்கம் செய்து, அவற்றிற்கு ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமங்களை (CLPA) ஏற்படுத்தி விரைவில் அனுமதி பெறும் வகையில் தீர்வு காண வேண்டுகிறோம்.
பாரம்பரிய நகரங்கள்: அதேபோன்று பாரம்பரிய நகரங்களான மேற்கண்ட நகரங்களில் மக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, மேற்கண்ட உள்ளூர் திட்ட குழுமத்திற்கான வரைவில் அவைகளை தொடர் கட்டட பகுதியாக (CBA) மாற்றியமைத்திட வேண்டுகிறோம்.
புதுக்கோட்டை மாநகராட்சியில் முழுமை திட்டத்தை (Master Plan) உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து விரைவில் அனுமதி பெறும் வகையில் தீர்வு காண வேண்டுகிறோம். அறந்தாங்கி நகராட்சியில் தற்போதுள்ள (SLPA) தனித்த உள்ளூர் திட்ட குழுமத்தை மாற்றியமைத்து, அதன் எல்லையை விரிவாக்கம் செய்து, ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமத்தை (CLPA) ஏற்படுத்தி விரைவில் அனுமதி பெறும் வகையில் தீர்வு காண வேண்டுகிறோம்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரமான மயிலாடுதுறை நகராட்சியுடன் புகழ்பெற்ற பூம்புகார் மற்றும் தரங்கம்பாடியையும் இணைத்து புதியதாக ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமத்தை ஏற்படுத்தி விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம். சீர்காழி நகராட்சியில் ஏற்கனவே உள்ள தனித்த உள்ளூர் திட்ட குழுமத்தின் (SLPA) எல்லையை கணிசமாக விரிவாக்கம் செய்து, ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமத்தினை விரைவில் ஏற்படுத்திட வேண்டுகிறோம்.
நாகை நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சியை ஒருங்கிணைத்து ஏற்படுத்தியுள்ள முழுமை திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து விரைவில் அனுமதி பெறும் வகையில் தீர்வு காண வேண்டுகிறோம்.
கடலோர பாதுகாப்பு மண்டலம்: வேதாரண்யம் நகராட்சியில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு, கடலோர பாதுகாப்பு மண்டலம் (CRZ) மிக அருகில் அமைந்துள்ளதால் மிக கவனமாக ஒருங்கிணைந்த உள்ளூர் திட்ட குழுமத்தினை புதியதாக ஏற்படுத்தி நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
மேற்கண்ட தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வாய்ப்புள்ள பகுதிகளில் கொங்கு மண்டலத்தை போன்று, இம்மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் ஏதுவாக வேளாண்மைக்கு அடுத்தபடியாக தொழில் வளர்ச்சியை அரசு மேம்படுத்த வேண்டும்.
இணையதளம்: நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றை சாளர முறை திட்டத்தில் இறுதி ஒப்புதலையும் இணையதளம் வாயிலாகவே 15 தினங்களுக்குள் (AUTOMATIC APPROVAL OR DEEMED APPROVAL) வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
தமிழகம் முழுவதும் கடந்த 20.10.2026 க்கு பிறகு அங்கீகாரம் இல்லாமல் மனைகளாகவும், ஐந்து சென்ட் பத்து சென்ட் நிலமாகவும் தற்போது வரை பதிவு செய்த ஆவணங்களை மறுக்கிரையம் செய்ய இயலவில்லை, இதற்கு தீர்வு காணும் வகையில் குறைந்தபட்ச அபராதத்துடன் கூடிய சிறப்பு திட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் பதிவு செய்யும் வகையிலும், அங்கீகாரம் பெறும் வகையிலும் அரசு வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
தொழில்நுட்பங்கள்: நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் இணையதளத்தில் புதிய திட்டங்களை விண்ணப்பிக்கும் போது தற்போது உள்ளது போன்று எந்தவித தங்கு தடையும் காலதாமதமும் இல்லாமல், விரைவாகவும் அதிவேகமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி மென்பொருளை வலிமைப்படுத்த வேண்டுகிறோம்" என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.