இல்லம் தேடிக் கல்வி... தன்னார்வலர்களுக்கான தகுதி என்ன..? வழிகாட்டு நெறிமுறை ரிலீஸ்..!
சென்னை: சாதி, மதம், பாலினம் என பாகுபாடு பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றி செயல்படக் கூடியவர்களை மட்டுமே இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கான தன்னார்வலர்களாக தேர்வு செய்ய வேண்டும் என அதற்கான வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்தல் தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பதாவது;

*மாநில அளவில் தன்னார்வலர்கள் பதிவு நடைபெற்று வருகிறது. வெப் போர்டல் மூலமே தன்னார்வலர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
*பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, மாவட்ட குழு உறுப்பினர் செயலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
*இல்லம் தேடிக் கல்வி மையம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியை தன்னார்வலராக வர விரும்புவோர் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
*ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர் குழுவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் குழுவுக்கு இளங்கலை பட்டமும் பயின்றிருக்க வேண்டும்.
*தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் போது பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.
*தன்னார்வலர்களை அவர்களின் பின்புலங்களின் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.
*தன்னார்வலர் குறைந்தது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
*மையத்திற்கு வரும் குழந்தைகளை சாதி, மதம், பாலினம், எனப் பாகுபடுத்தாமல் விருப்பு வெறுப்பின்றி சமமாக கருதுபவராக இருக்க வேண்டும்.
*உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஹை டெக் லேப்-ல் உள்ள கணினி மூலம் இணைய வழியாக குழந்தைகளை கையாளும் திறன் அறிவு தேர்வு நடைபெறும்.
*குழந்தைகளை கையாளும் திறன் அறியும் தேர்வு முடிந்தவுடன் குழு விவாதம் நடத்தப்பட வேண்டும்.
*இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் எந்த காலக்கட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என மாவட்ட மற்றும் ஒன்றியக் குழுக்களால் அறிவிக்கப்பட்டால் உடனடியாக அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார்.
மேற்கண்ட இந்த அம்சங்கள் அடங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்வு தொடர்பாக அதன் மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications