பவுன்சர்களை வைத்து அட்ராசிட்டி.. நிலைகுலைந்த பத்திரிகையாளர்.. தவெக ஆண்டு விழாவில் பஞ்சாயத்து!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை விழா அரங்கிற்குள் அனுமதிக்காததோடு, அவர்கள் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பவுன்சர்கள் தாக்கியதில் பத்திரிகையாளர் இளங்கோவன் சீனிவாசன் நிலை குலைந்து நடக்க கூட முடியாமல் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தவெக சார்பாக தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிரான கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கான 21 வகையான சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தவெக நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகளின் செல்ஃபோன் அரங்கிற்கு வெளியில் கொடுத்து செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விஜய் பேசும் போது செல்ஃபோனில் வீடியோ எடுத்து கவனத்தை சிதறவிடாமல் இருக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே தவெக நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல பத்திரிகையாளர்கள் முயற்சித்த போது, சில அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது அரங்கிற்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை என்று தவெக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். தவெக சார்பாக லைவ் லிங்க் அளிக்கப்படும் என்றும், அதன் மூலமாக செய்தியை சேகரிக்கலாம் என்றும் கூறி இருக்கின்றனர்.
ஆனால் பத்திரிகையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று பவுன்சர்களிடம் பத்திரிகையாளர்கள் பேசி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில், பவுன்சர்களில் சிலர் பத்திரிகையாளர்களை தரக் குறைவாக பேசி இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர் இளங்கோவன் சீனிவாசன் மீதும் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் நிலை குலைந்த பத்திரிகையாளர் அங்கிருந்த நடக்க முடியாமல் சக பத்திரிகையாளர்களின் உதவியுடன் கைதாங்கலாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பவுன்சர்கள் அச்சுறுத்தலாக மாறி இருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications