ஆஹா.. ட்விஸ்ட்! இறங்கி வந்த ஆளுநர் ரவி.. மீட்டிங் அழைப்பை தள்ளிப்போட்ட முதல்வர்? காரணம் இதுதானா?
சென்னை: உச்ச நீதிமன்றம் கூறிய யோசனையை தொடர்ந்து, முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், முதல்வர் ஸ்டாலின், இந்தச் சந்திப்பை தள்ளிப் போட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் யோசனை: மேலும், மசோதாக்களை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை ஆளுநர் முடக்கி வைக்க முடியாது என தெளிவுபடுத்தியது. அதோடு, ஆளுநர் - முதலமைச்சர் இருவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தது.
ஆளுநர் ரவி அழைப்பு: இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வரும் ஆளுநரும் பேச்சுவார்த்தை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து முதலமைச்சருக்கு அழைப்பு சென்றுள்ளதாகத் தெரிகிறது.
தள்ளிப்போட்ட முதல்வர்?: இதற்கு தமிழக முதல்வர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. தற்போது புயல் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய குழுவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே வேறொரு நாளில் சந்திக்கலாம் எனப் பதில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அரசு தரப்பில் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை.
இதற்கிடையே, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தது. அதில், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரியிருந்தது. இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இந்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications