கோட்ஸேவையா? சாவக்கரையா?.. அலங்கார ஊர்தியில் யார் படம் இருந்தால் ஏற்பீர்கள்? கமல்ஹாசன் கேள்வி!
சென்னை: குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசுத் தின அணிவகுப்பில் இந்த முறை நிராகரிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் கடைசியில் தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
வ.உ.சி., வேலுநாச்சியாரை தெரியாது என கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரிப்பு செய்துள்ளதாக இணையத்தில் பலர் புகார்கள் வைத்து வருகின்றனர். ஆனால் விதிப்படியே தமிழ்நாடு அலங்கார ஊர்தி ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இதில் அரசியல் எதுவும்இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அலங்கார ஊர்தி
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வ.உ. சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை சர்வதேச அதிகாரிகளுக்கு தெரியாது என்றால் பின்னர் யாரை தெரியும்? பின்னர் யாருடைய உருவங்களை அலங்காரத்தில் பயன்படுத்த போகிறீர்கள்.

விமர்சனம்
வேறு யார் படங்களை அலங்காரத்தில் பயன்படுத்த போகிறீர்கள்.. கோட்ஸேவையா? கோல்வாக்கரையா? சாவக்கரையா?.. யார் புகைப்படத்தை பயன்படுத்த போகிறீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். உடல்நிலை குறைவு காரணமாக கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கமல்ஹாசன் விமர்சனம்
இந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன், தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விமர்சனம் வைத்துள்ளார். முன்னதாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேலு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத் தாங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் விமர்சனம்
இவர்களை சர்வதேச அளவில் யாருக்கும் தெரியாது என அதிகாரிகள் பதிலளித்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இவர்களைத் தெரியாது என்றால் வேறு எவரின் உருவங்களை வைக்கப்போகிறார்கள்? இவர்களை நிராகரித்த நிபுணர்கள் யார்அவர்களது பெயர்களும் தகுதிகளும் வெளியிடப்பட வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் பிறந்த நாளுக்கும், மகாகவி பாரதியின் நினைவு நாளுக்கும் பாரதப் பிரதமர் ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தி இருந்தாரே, அது 'நிபுணர்' குழுவிற்குத் தெரியாமல் போயிற்றா?, என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications