எச்.ராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுங்க.. மோடிக்கு கோரிக்கை வைத்த காயத்ரி ரகுராம்! எதற்காக தெரியுமா?
சென்னை: எச்.ராஜா அண்ணா தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும், தேசத்துக்கும் கட்சிக்கும் சேவை செய்துள்ளார். அவர் விருதுக்குத் தகுதியானவர். குறிப்பாக அவர் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதனால் அவருக்குப் பத்மஸ்ரீ அல்லது பத்மபூஷன் விருது அளித்து, கவுரவிக்க மரியாதைக்குரிய பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச். ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் எச். ராஜா அளிக்கும் பேட்டிகள் அனைத்தும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இருக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென நேற்று அறிவித்தார்.

சிவகங்கையில் பாஜக நிறுவனத் தினத்தையொட்டி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எச். ராஜா பின்னர் பேசுகையில் கூறியதாவது:- கிளைக் கூட்டங்களை வாரம் தோறும் நடத்தி மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும். உலகிலேயே 23 ஆண்டுகள் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் இருந்து ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். தேர்தல் அரசியலில் இருந்து நான் விலகுகிறேன். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாதான் போட்டியிடும். ஆகவே தற்போதே தேர்தல் பணியை அங்கு தொடங்க வேண்டும்" என்றார். தமிழக பாஜகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் எச்.ராஜாவின் இந்த கருத்து அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், எச்.ராஜாவுக்கு ஆதரவாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "எச்.ராஜா அண்ணா தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும், தேசத்துக்கும் கட்சிக்கும் சேவை செய்துள்ளார். அவர் விருதுக்குத் தகுதியானவர். குறிப்பாக அவர் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதனால் அவருக்குப் பத்மஸ்ரீ அல்லது பத்மபூஷன் விருது அளித்து, எச்.ராஜா அண்ணாவைக் கௌரவிக்க மரியாதைக்குரிய பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எச்.ராஜா அண்ணா, உங்கள் தேசத்திற்கான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய பிறகும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் படு ஆக்டிவாக அரசியல் தொடர்பாக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அண்ணாமலையை கடுமையாக சாடி அவரது அரசியல் நடவடிக்கைகளை குறை கூறியும் சீண்டி வரும் காயத்ரி ரகுராம், தற்போது எ.ராஜாவிற்கு விருது கொடுக்க வேண்டும் என்று பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. காயத்ரி ரகுராமின் ட்விட் பதிவுக்கு கீழே நெட்டிசன்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications