இனி எல்லாமே டிஜிட்டல் தான்.. விவசாய நில அடங்கல் விபரங்களை ஆன்லைனில் பார்க்கலாம்! வருவாய்துறை அசத்தல்
சென்னை: தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்துறை தொடர்ந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பட்டா சிட்டா விவரங்கள் ஆன்லைனில் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டா விபரங்களை பார்ப்பது போல விவசாய நிலங்களின் அடங்கல் விபரங்களையும் ஆன்லைனிலேயே பார்ப்பதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் பத்திர பதிவு துறையானது நிலம் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. நிலம் பதிவு பட்டா மாற்றம் அடங்கல் சிட்டா உள்ளிட்ட விவரங்கள் வருவாய் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வருவாய் துறையும் பத்திரப்பதிவுத்துறையில் இணைந்து டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே நிலம் தொடர்பான அனைத்து வகை ஆவணங்களையும் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது வருவாய்துறை சார்பில் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். பத்திரப் பதிவுத் துறை சார்பில் பட்டா மாறுதல் பெயர் மாறுதல், நில வரை விவரங்களை பார்ப்பது உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக செய்து கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்கு நீண்ட காலம் பொதுமக்கள் அலைய வேண்டியிருந்த நிலையில் தற்போது டிஜிட்டல் முறையால் நொடிப்பொழுதில் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக நிலப்பட்டாக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதிதாக வழங்கப்பட்டாக்களும் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படுகிறது. மேலும், நில அளவை வரைபடங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் வருவாய் துறையின் இணையதளத்தில் பட்டா ஏ பதிவேடு போன்ற ஆவணங்களையும் நில வரைபடங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவற்றை ஆன்லைன் மூலமாக பார்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கும் நிலையில் விவசாய நிலங்களின் உரிமை, சாகுபடி விவரங்களையும், பிற ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்கான நடைமுறைகள் துவக்கப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகளுக்கான பிரத்யேக செயலியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதில் விவசாயிகள் தங்கள் அடங்கல் விபரங்களை இணையதளத்தில் அவர்களாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் தற்போது இதில் புதிய அம்சமாக டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்படும் அடங்கல் விபரங்களை பொதுமக்களே பார்த்துக்கொள்ள முடியும்.
இதனை வருவாய்த் துறையின் www.clip.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்திக் பார்த்துக் கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். விவசாய நிலங்களை வாங்க விரும்பும் மக்களும் விற்க விரும்புவர்களும் இந்த ஆவணங்களை துல்லியமாக பார்ப்பதற்கு வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. விவசாய நிலங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகளும் இந்த நடைமுறை மூலம் விரைவான சேவையை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications