தீயாக பரவும் கொரோனா..தியேட்டர், ஷாப்பிங் மால் போனால் மாஸ்க் அவசியம் - மக்கள் நல்வாழ்வுத்துறை
சென்னை: தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், கலையரங்கங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் அரங்குகளில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அச்சமில்லை என்றாலும் பொது இடங்களுக்கு செல்வோர் மாஸ்க் அணிவது அவசியம் என சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு முதலே கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா இரண்டாவது அலையில்தான் இந்தியாவில் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தினசரி பாதிப்பு 100 பேருக்கும் கீழாக குறைந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3500 பேரை தாண்டி பதிவாகி வருகிறது.
தமிழகம், புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது தமிழகத்தில் 150ஆக பதிவாகி வருகிறது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 1ஆம் தேதி முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் முகக் கவசம் அணிகின்றனர். இந்நிலையில், தியேட்டர்கள், குளிர்சாதன அரங்கங்களில் இருப்பவர்கள் முகக் கவசம் அணியுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தற்போது அச்சமடையும் நிலையில் கொரோனா தொற்று பரவல் இல்லை. மிதமான வகையில்தான் இருக்கிறது. பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, மருத்துவமனைகளில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், கலையரங்கங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் அரங்குகளில் அனைவரும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதை உத்தரவாகப் பிறப்பிக்காமல், அறிவுறுத்தலாக தெரிவித்துள்ளோம். அதேநேரத்தில், பொதுவெளியில் செல்வோருக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனாலும், முதியோர், இணை நோயாளிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோர் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்துகொள்வது நல்லது. இவ்வாறு செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காரைக்காலில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பிற்கு தூத்துக்குடியில் பார்த்திபன் என்பவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பார்த்திபன் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால் மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications