அவிநாசி ரிதன்யா இறப்பு திட்டமிட்ட கொலை! பரபரப்பை கிளப்பிய சீமான்! ஏன் என்னாச்சு?
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சிணை கொடுமையால் இறந்த ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிடப்பட்ட படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதுாரைச் சேர்ந்த ரிதன்யா (27) வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் அவர் பேசிய வீடியோ, இதயத்தை நொறுங்க செய்கிறது.

அவரது தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது, முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக, மூவரும், எளிதில் ஜாமீனில் வரக்கூடிய வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
இது வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை. இந்த நுாற்றாண்டிலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த சமூகமும் தலைகுனிய வேண்டும்.
ரிதன்யா மரணத்துக்கு காரணமான மூவர் மீதும், கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரிதன்யாவிற்கும், கவின் குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரையும் வரதட்சணையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கணவர் கவின் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக 200 சவரன் நகையும் பணமும் கேட்டு ரிதன்யாவை தொடர்ச்சியாக துன்புறுத்தியுள்ளனர்.
வரதட்சணைக் கொடுமை மற்றும் உடல், மன ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரிதன்யா, ஜூன் 28 அன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது பெற்றோருக்கு எட்டு ஆடியோ செய்திகளை அனுப்பியுள்ளார். அதில், கணவர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோர் தனக்கு அளித்த கொடுமைகளை விவரித்துள்ளார்.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த படுகொலை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையின் விசாரணையில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், இந்த வழக்கை CBCID விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் ரிதன்யாவின் பெற்றோர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications