ஒரே மேடையில்! அடுத்தடுத்த இருக்கைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் துணை முதல்வர் உதயநிதியும்! பரபரப்பு
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தார். அது போல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார்.
இந்த விழா குத்துவிளக்கேற்றுதலுடன் தொடங்கியது. முதலில் ஆளுநர் விளக்கேற்றினார். பிறகு அவர் உதயநிதியை விளக்கேற்ற அழைத்தார். இந்த விழாவில் 3,576 பேருக்கு பட்டமளிப்பு நடைபெற்று அண்மைக்காலமாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
அதிலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு விழாவில் சனாதன தர்மம் குறித்து பேசிய பேச்சுகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெங்கு, கொரோனா, மலேரியாவை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 2023 ஆம் ஆண்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஆளுநர் ரவி டெல்லி சென்ற போது , உதயநிதி , ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. அதனால்தான் அவர் டெல்லி சென்று வருகிறார் என உதயநிதி, ஆளுநரை சீண்டினார்.
அது போல் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர், தமிழக அரசு எழுதிக் கொடுத்த முழு உரையையும் படிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அந்த முழு உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கூட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும் முன்னரே ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தையும் பாஜக நிர்வாகிகள், மூத்த மத்திய அமைச்சர்கள் புறக்கணித்ததை அடுத்து இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார்.
அது போல் காந்தி ஜெயந்தி அன்று கூட அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தை சுத்தம் செய்ய முயன்ற ஆளுநர் அங்கு மதுபாட்டில்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் காந்தி மண்டபத்தை கூட தமிழக அரசு சுத்தமாக பராமரிக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி உரிய பதிலை தெரிவித்தார். அதில் ஆளுநர் பாதை விலக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இப்படி தொடர் மோதல்கள் இருந்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், துணை முதல்வர் உதயநிதியும் ஒரே மேடையில் பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் நடந்த அமைச்சர்கள் பதவிப்பிரமாணத்திலும் கூட நடுவே ஆளுநர், வலது பக்கம் முதல்வர், இடது பக்கம் துணை முதல்வர், சுற்றி அமைச்சர்கள் என குழு புகைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி இருந்த போதும் ஆளுநருடன் மோதல் போக்கையே கடைப்பிடித்திருந்தார். அதனால்தான் அவருடைய இலாகா மாற்றப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications