வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி
சென்னை: தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்என் ரவி தற்போது மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு மூன்று பக்க கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்ட அவர் தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு வார்த்தைகள் போதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்தத்தில்," அன்புச் சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டுச் சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஒட்டத்தில் இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும் உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.

மகாகவி பாரதியாரையும், கவிச்சக்கரவர்த்தி கம்பரையும், அருட்பிரகாச வள்ளலாரையும், ஐயா வைகுண்டரையும், பொய்யாமொழிப் புலவராம் வள்ளுவப் பேராசானையும், கணியன் பூங்குன்றனாரையும், தமிழ்த் தாத்தா 14 கே 2 வே சாமிநாதய்யரையும், ரசிகமணி சிதம்பரநாத முதலியாரையும், பூலித்தேவனையும், மருது சகோதரர்களையும், வீரமங்கை வேலுநாச்சியாரையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும், இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜிக்குப் பக்கபலமாக நின்ற தமிழ்வீரர்களையும், இன்னும் இன்னும் இன்னும்.......அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல், பெயர்களும் நினைவுகளும் கருத்துகளும் புதையல்களாக என் உள்ளத்தில் மண்டுகின்றன.
கடந்த 54 மாதங்களில், உங்களோடும் உங்கள் வழியாக இந்தப் பெருமக்களோடும் வாழ்ந்தேன், மகிழ்ந்தேன். செம்மாந்த நெறிகளில் திளைத்தேன், அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கலந்தேன். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்தபோது, கோவிட் பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்திருக்கவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
யாரைச் சந்தித்தாலும், எங்கே போனாலும், புன்னகைகள்தாம் என்னைச் சூழ்ந்தன. தெரிந்தவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள் என்றெல்லாம் இல்லாமல், எளிய மக்கள் எல்லோரும், குழந்தைகள் உட்பட, முகத்தில் முறுவலோடும், கண்களில் ஆர்வத்தோடும். நெஞ்சங்களில் நேசத்தோடும் பழகுகிற பாங்கினைக் கண்டேன். மனித நேய உறவினால் பொலியும் மாபெரும் தமிழ் குடும்பத்தில் ஒருவனாகவே உணர்ந்தேன். இன்றும் உணர்கிறேன்.
'கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்னும் மகாகவியின் வரிகளின் மகத்துவத்தை முழுமையாக உணரமுடிந்தது. வெறும் ஏட்டுக் கல்வியாக இல்லாமல், கல்வியின் துல்லியத்தையும் ஞானத்தையும் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள், தக்க நிலையில் வெளிப்படுத்தவும் செய்கிறீர்கள். பாரத தேசத்தவர் யாரும் இராமனுடைய செல்வாக்கோ, கிருஷ்ணனுடைய செல்வாக்கோ இல்லாமல் இருக்கமுடியாது. மிகச் சிறிய வயதிலிருந்தே பகவத் கீதையையும் துளசிதாசரின் ராம சரித மானசத்தையும் பயின்று பழகிய எனக்கு, கம்பரின் காவியம்
மேலும் விசாலமான பார்வையை அருளியது. 'அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்' என்னும் அவரின் வரிகளை, அவரின் கவித்துவத்திலும் காவிய நாடகத்திலும் அறவழி வாசகங்களிலுமே கண்டேன். அலகிலா விளையாட்டுடைய அந்த அருந்தமிழ்ப் பெருமகனார் மீதும், அவர் காட்டுகிற இராமன் மீதுமான காதல் தான், சென்னை மக்கள் மாளிகையில், கம்பர் வனம் அமைத்து, கவிச்சக்கரவர்த்திக்குச் சிலை வைத்துப் பணியச் செய்தது. திருவாசகத்தை முற்றோதல் செய்வது போல, கம்பராமாயணத்தை, குறைந்த பட்சம் சில பகுதிகளையாவது ஓதிக் களிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
இளைய தலைமுறையையும் மாணவ சமுதாயத்தையும் இவ்வாறு செய்யச் செய்தால், அறம்-பொருள்-இன்பம் தழைக்கும் என்பதில் ஐயமில்லை. சங்கப் புலவர்களின் சமுதாய நோக்கம், திருவள்ளுவரின் மாண்பு, தமிழின் சம கால இலக்கியங்கள், மரபு சார்ந்த தமிழ்ப் பழக்கங்கள் என்று தமிழின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழ் மக்களின் பரிமாணங்களையும் நேரடியாக அறிகிற பேறும், அறிஞர்களோடு கலந்து அளவளாவுகிற பேறும் நிறையவே எனக்குக் கிட்டியுள்ளன.
உண்மையிலேயே ஆனந்தத்தில் திளைக்கச் செய்த தருணங்கள். 'கல்வி என்பது என்ன?' என்றொரு கேள்வி எழுந்தது. சுவாமி விவேகானந்தர் அதற்கு விடை சொன்னார். 'ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உள்ள தெய்விகத்தை மலரச் செய்வதே கல்வி' என்றார். தமிழையும், சங்க இலக்கியம் தொடங்கி சமய இலக்கியம் வரையான தமிழ்ப் புதையலையும் வாசித்தால், இத்தகைய கல்வியைப் பெறலாம்.
அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு - உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன். ஊர்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவை மாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும், உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் மாறவேயில்லை.
மாணவர்களிடம் இருக்கிற துள்ளலையும் சிரிப்பையும் வயது முதிர்ந்தவர்களிடமும் கண்டேன்; உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பார்த்தேன். நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது.
தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். 'செயற்கை நுண்ணறிவை' இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சென்றபோது இதைக் கண்டேன்.
மாணவர்களோடும் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களோடும் பல்வேறு வகையான பயிற்சிகளுக்குத் தயாராபவர்களோடும் உரையாடிய நிகழ்ச்சிகளில், அவர்களின் ஆற்றலும் திறமையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய உரையாடல் நிகழ்வுகள், எனக்குள் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தோற்றுவித்தன. ஆங்கிலத்தில், 'என்ரிச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்' என்பார்களே, அப்படிப்பட்ட மேம்பாட்டு அனுபவம்.
தமிழ்நாட்டின் மேன்மைகளில், ஆகச் சிறந்த மேன்மை, கோயில்கள்! தில்லைச் சிதம்பர நடராஜரும் திருவரங்க ரங்கராஜரும் தமிழன்னையின், தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்கள். தமிழ்கூறு நல்லுலகை எப்போதும் பாதுகாத்து அருள்பாலிப்பார்கள். திருக்கோயில்களில் காணப்படுகிற சிற்பங்களும், சுவரோவியங்களும், அறவழிக் காட்சிகளும், கல்வெட்டுகளும் பாரதப் பண்பாட்டுக் கருவூலங்கள். இவற்றையெல்லாம் பாதுகாப்பது மட்டுமில்லாமல், இளைஞர்களும் அறிஞர்களும் மேலும் மேலும் பயின்று, ஆராய்ந்து. பாரதத் திருமரபின் ஞானப் பெருக்கத்திற்கு உதவவேண்டும்.
தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள். பூலித்தேவனும் கட்டபொம்மனும் வீரமங்கை வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் எவ்வாறெல்லாம் பாடுபட்டனர். எப்படியெல்லாம் குரல் கொடுத்தனர் என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். 1857ஆம் ஆண்டின் சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக, 1806ஆம் ஆண்டே வேலூர் புரட்சி எழுந்தது. தமிழிலக்கியங்கள், பாரத நாட்டைப் பற்றிக் கூறும்போது 'நாவலந்தீவு' என்னும் பெயரைப் பயன்படுத்துகின்றன. நிலவியல் ஆய்வுகளின்படி, இந்திய தீபகற்பத்தை, இப்பெயரோடு பொருத்தலாம். மருது சகோதரர்கள், 'ஜம்புத் தீவு பிரகடனம்' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
செக்கிழுத்த செம்மல் வ உ சியும், பாரத மாதாவுக்குக் கோவில் கட்ட விழைந்த சுப்பிரமணிய சிவாவும், கொடி காத்த குமரனும், சமுதாய விலங்குகளையும் நோய்ப் பிணிகளையும் அகற்ற முற்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும், வானரப் படை வைத்து தேசியத்திற்குப் பணி செய்த ருக்மிணி லட்சுமிபதியும், காந்தியத்தையும் பெண்ணியத்தையும் பேணி வளர்த்த அம்புஜம்மாளும் இன்னும் பலரும் தேசிய நீரோட்டத்தில் நீந்தித் திளைத்தவர்கள்; ஆசைப்பட்டவர்கள். நாமும் அவ்வாறே ஆனந்தப்படவேண்டும் என்று
அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டே போகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா- என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா!
அன்பானவர்களே! அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன்." என கூறியுள்ளார்.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!













Click it and Unblock the Notifications