திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப் கார்.. 1000 ஆண்டு பழமையான கோவில் புணரமைப்புக்கு ரூ. 100 கோடி
சென்னை: 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, 'தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில், தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி அளிக்கிறோம்.
ரூ. 1000 கோடியில் தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் ரூ. 300 கோடியில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆயிரக்கணக்கான கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பல கோவில்கள் புணரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. மகா சிவராத்திரி விழா, நவராத்திரி கொலு கண்காட்சி போன்றவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்மீக சுற்றுலாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கும் பக்தர்கள் வசதிக்காக திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு. இங்கு சுப்ரமணியசுவாமி மூலவர் கீழே இருந்தாலும் மலை மேல் கைலாசநாதர் ஆலயம் உள்ளது. மச்சமுனியை தரிசனம் செய்யவும் பக்தர்கள் படியேறி செல்கின்றனர். இந்த நிலையில் மலை ஏற முடியாமல் தவிக்கும் பக்தர்களுக்காக ரோப்கார் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications