கொடுங்கையூரில் வாகன சோதனையில் ரூ 1.54 கோடி பணம் பறிமுதல்.. போலீஸார் விசாரணை
சென்னை: கொடுங்கையூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ 1.54 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வடசென்னை புளியந்தோப்புக்குள்பட்ட கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் தலைமை காவலர் கணபதி ஜிஎன்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை தணிக்கை செய்யும் பொழுது பின்னால் இருந்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்தார். இதையடுத்து அவரை விசாரித்ததில் அவரிடம் பணப்பைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக கொடுங்கையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜனுக்கு தகவல் தெரிவித்து அந்த வாகனத்தை கொடுங்கையூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அந்த பணப்பையில் ஒரு கோடியே ஐம்பத்தி நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் (1,54,50,000 ) இருந்து. இது தொடர்பாக காவல் துணை ஆணையாளர் (சட்டம்- ஒழுங்கு) நேரில் விசாரணையை மேற்கொண்டு உள்ளார். பொதுவாக தேர்தல் நேரத்தில்தான் இது போன்று பணம் பறிமுதல் செய்யப்படும்.
தற்போது உள்ளாட்சி தேர்தலும் முடிந்துவிட்டது. அவ்வாறிருக்கையில் எதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை. இது தொடர்பாக பணத்தை கொண்டு சென்றவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு காரணம் நியாயமாக இருந்தால் அந்த பணம் உரியவரிடம் திருப்பி கொடுக்கப்படும். விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
இது போல் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் காரைக்குடி அருகே வாகன சோதனையில் 2 கார்களில் கொண்டு வரப்பட்ட ரூ 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் பயணம் செய்தவர்கள் போலீஸார் காரை தடுத்து நிறுத்தியும் நிற்காமல் பயணம் செய்தனர். இதையடுத்து போலீஸார் வேகமாக விரட்டிச் சென்று குன்றக்குடியில் அந்த காரை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்களை கைது செய்தனர். இது போன்று பணம் பதுக்கும் சம்பவங்களும் பணம் கடத்தல் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications