குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000..கல்விக்கடன் ரத்து...ஏமாற்றிய முதல்வர் - இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் அதிக கடன் வாங்கியிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல கல்விக்கடன் ரத்து செய்வது பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. அதே போல மகளிருக்கு உரிமத்தொகை ரூ.1000 வழங்கப்படுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமல் நிதியமைச்சர் சாக்கு போக்கு சொல்வதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அதனை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். 8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது என்பதை நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார்.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது
மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். உரிமை தொகை பெற தகுதியுடையவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர்.

கடன் சுமை அதிகரிப்பு
கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை என்று கடந்த ஆண்டு திமுக குற்றம்சாட்டியது.

அதிமுக புறக்கணிப்பு
இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஜெயக்குமார் கைது, எஸ்.பி வேலுமணி ரெய்டு பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமி பேச அனுமதி கேட்டனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுகவினர் கூச்சலிட்டனர். இதனால் அமளி துமளி ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் உரையை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி
பட்ஜெட் உரை முடிந்த உடன் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு செய்தது ஏன் என்று விளக்கம் அளித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த கொரோனா காலத்தில் அரசுக்கு வருவாயே கிடைக்கவில்லை அதனால் வருவாய் பற்றக்குறை ஏற்பட்டதாக கூறினார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறினார்.

கடன் சுமை கூடுதல்
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் 4.85 லட்சம் கோடி தான் கடன் பெற்றிருந்தது . வருவாய் அதிகரித்துள்ள நிலையில், கடன் குறைந்திருக்க வேண்டும், ஆனால் குறையவில்லை, தற்போது 2 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு சரியாக செயல்படவில்லை என்றார். திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை; மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும் கூறினார்.
Recommended Video

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000
கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தனர். அதுபற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதே போல குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியதைப்பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. சாக்குப்போக்கு சொல்லி நிதியமைச்சர் அதை தள்ளிப்போட்டு விட்டதாக குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications