டெக்னாலஜி அவசியம்.. ஜப்பான், சீனா செல்லும் 100 விவசாயிகள்.. வேளாண் பட்ஜெட்டில் வெளிவந்த அறிவிப்பு!
சென்னை: ஜப்பான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வேளாண் முறையையும், தொழில்நுட்பத்தையும் அறிவதற்காக 100 உழவர்களை வேளாண் சுற்றுலா அழைத்து செல்ல ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களை உயிர்மை சுற்றுலா அழைத்து சென்று வேளாண் பணிகளை பற்றி விளக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை 2025 வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வரும் அவர், விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த பட்ஜெட் வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் அளிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் உருவாக்கப்படும் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் உழவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மற்ற நாடுகளின் வேளாண் முறையையும், தொழில்நுட்பத்தையும் அறிவதற்காக 100 உழவர்களை ஜப்பான், சீனா மற்றும் வியட்நான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் அதிக விளைச்சலை காட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக விளைச்சலை காட்டும் முதல் விவசாயி-க்கு ரூ.2.50 லட்சமும், 2வது விவசாயிக்கு ரூ.1.50 லட்சமும், 3வது இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.1 லட்சமும் பரிசு வழங்கப்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களை உயிர்மை சுற்றுலா அழைத்து சென்று வேளாண் பணிகளை பற்றி விளக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications