இன்றே அக்கவுண்டில் வந்த ரூ.5000.. பின்னணியில் இருப்பது உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து! ஸ்டாலின் சரவெடி
சென்னை: 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அதிரடி முடிவின் பின்னணியில் உச்சநீதிமன்றம் தெரிவித்த ஒரு முக்கியமான கருத்து உள்ளது.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 உரிமைத்தொகை பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் விளக்கம்
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
2,000 ஆக உயர்த்தி வழங்குவோம்
வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!" எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் உச்ச நீதிமன்ற கருத்து
அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை தடுக்கக் கோரி பாஜகவைச் சேர்ந்த உபாத்யாய வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்போவதாக கூறியிருந்தது.
அண்மையில் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அம்மாநிலத்தில் மகளிருக்கு வழங்கப்பட்ட உதவித் தொகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டிலும் தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமை தொகைக்கு தடை கோரி வழக்கு தொடர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுதாரித்துக் கொண்ட ஸ்டாலின்
இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்திய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதற்கு முன்பாக உரிமைத்தொகையை அட்வான்ஸ் ஆக வழங்கிவிடலாம் எனத் திட்டமிட்டு, இன்றே 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் மொத்தமாக ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications