தமிழ்நாட்டில் நீதிமன்ற அனுமதியுடன் 55 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்- பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற அனுமதியுடன் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விஜயதசமி நாளில் தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது. ஆனால் தமிழ்நாடு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கும் போனது. உச்சநீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது. தமிழ்நாடு அரசு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்தம் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலம் நடைபெற்றது. சென்னையில் குரோம்பேட்டை, கொரட்டூர் மற்றும் மணலி ஆகிய 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, உடன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் கூனாலுமூடு, கோவை மாவட்டம் துடியலூர், கோட்டூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்,திருப்பூர் உடுமலை, நீலகிரி கோத்தகிரி, சேலம் மரவனேரி உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 55 இடங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்பட்டது.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்க முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் இப்ராஹிம் போலீசாரால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார். இந்த பேரணிகளை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.












Click it and Unblock the Notifications