விஎஸ் பாபு மரணத்தில்கூட அரசியல்? கேரள மாந்திரீகம், பட்டாசு கொண்டாட்டம் என வதந்தி பரப்பும் கும்பல்
சென்னை: விஎஸ் பாபு மரணத்திற்கு இடையே சிலர் இது தொடர்பாக அருவெறுக்கத்தக்க வகையில் வதந்திகளை பரப்பி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக உறுப்பினர் வி.எஸ். பாபு (வயது 75) 71 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலமானார். ஒரு எம்எல்ஏவின் மறைவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் நேரில் சென்றும் அறிக்கைகள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பரப்பி வரும் பொய்யான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

மரண வீட்டிலும் தொடரும் வதந்தி அரசியல்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒரு மனிதரின் மரணத்தில்கூட அரசியல் ஆதாயம் தேடும் விதமாக, சில த.வெ.க. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எந்த ஆதாரமும் இல்லாத பொய் செய்திகளை வேகமாகப் பரப்பி வருகின்றனர்.
பரப்பப்படும் முக்கிய பொய் செய்திகள் என்ன?
கேரளாவில் மாந்திரீகம் செய்ததாக வதந்தி
2026 தேர்தலில் மு.க. ஸ்டாலினை வி.எஸ். பாபு தோற்கடித்ததால், தி.மு.க. முக்கியப் புள்ளிகள் கேரளாவிற்குச் சென்று மாந்திரீகம் மற்றும் செய்வினை செய்ததாகவும், அதனால்தான் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.
பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகப் பொய்
வி.எஸ். பாபு உயிரிழந்த செய்தி வெளியானதும், கொளத்தூர் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடியதாகப் பழைய வீடியோக்களைப் பகிர்ந்து நெகட்டிவ் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் தலைவர்களுக்கு இடையே எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரின் மரணத்தின்போது கட்சி பாகுபாடின்றி துக்கத்தில் பங்கேற்பதே காலம் காலமாக இருந்து வரும் நாகரிகமாகும். வி.எஸ். பாபு ஆரம்பகாலத்தில் தி.மு.க.வில் பணியாற்றி புரசைவாக்கம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.. 2011 தேர்தலில் கொளத்தூரில் மு.க. ஸ்டாலினுக்காகத் தேர்தல் பணியாற்றியவர். பின்னர் அதிமுக வழியாக தவெகவில் இணைந்து வெற்றி பெற்றார்.
இப்படி அனைத்துக் கட்சியினருடனும் பழகிய ஒரு மூத்த அரசியல்வாதியின் மறைவுக்கு, அரசியல் நாகரிகம் கருதி எதிர்க்கட்சியினரே இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஒருவரின் சாவை வைத்தும் எதிர்க்கட்சியினர் மீது வெறுப்பை விதைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
மருத்துவமனை நிர்வாகமே நுரையீரல் தொற்று மற்றும் மாரடைப்பு காரணமாகத்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மூடநம்பிக்கைகளையும் பொய்யான வீடியோக்களையும் பரப்புவது மிகவும் தரம் தாழ்ந்த செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். துக்கமான நேரத்தில்கூட அரசியல் லாபம் தேட நினைக்கும் இத்தகைய "டாக்சிக்" இணையக் கும்பல் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
