அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் ஓட்டு போட்டிருந்தாலே! விஜயகாந்த் முதல்வராகியிருப்பாரே! எஸ்.ஏ.சி. வேதனை
சென்னை: விஜயகாந்தை நான் தம்பியாகவே நினைத்தேன் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்தின் ஆசானும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் விஜயகாந்த் குரு சிஷ்யனுக்கான உறவுதான் எங்களுக்குள் இருந்தது. நான் மிகவும் கோபக்காரர், ஷூட்டிங்கில் நான் கண்டிப்பாக இருப்பேன்.

ஆனால் அப்படிப்பட்ட என்னுடன் விஜயகாந்த் 17 படங்களை செய்துள்ளார் என்றார் அவருக்கு எத்தனை பொறுமை இருக்கிறது என்பதை பாருங்கள். எங்களுக்கு இதுவரை ஈகோவே வந்ததில்லை. அவர் அன்புடன் அர்ப்பணிப்புடன் என்னுடன் பணியாற்றினார்.
நான் போன் செய்து படம் செய்யலாம், தேதி கொடுங்கள் என விஜயகாந்திடம் கேட்டாலே அவர் என்னை சொல்ல சொல்வார். சார் நீங்கள் சொல்லுங்கள், என் கால்ஷூட் உங்களுக்கு எப்போது வேண்டும் என கேட்பார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் இன்று இல்லை என நினைக்கும் போது மனம் வருந்தத்தான் செய்கிறது.
அவரது நினைவிடத்தில் நான் அஞ்சலி செலுத்த சென்ற போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவருடன் படம் இயக்கிய நினைவுகள் எல்லாம் எனக்கு நிழலாடின. இயக்குநருக்கு மரியாதை கொடுப்பதில் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இயக்குநர்கள் நினைத்தால் சாதாரணமாக தெருவில் போவோரும் உயரத்தை அடையலாம்.

விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது சிவாஜி, மனோரமா உள்ளிட்டோரின் உடல்களுக்கு இறுதி மரியாதை கொடுத்து நடிகர் சங்கம் சார்பிலும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஆனால் விஜயகாந்துக்கு நடிகர் சங்கத்திலிருந்து யாரும் வரவில்லை. அதை பற்றி அவர்களது வீட்டில் இருப்போரும் கவலைப்படவில்லை.
விஜயகாந்துக்கு மரியாதை கொடுக்காதது நடிகர் சங்கத்திற்குத்தான் அசிங்கமே தவிர அவருக்கு அல்ல. எல்லாவற்றையும் விட தமிழ்நாடே வந்துவிட்டதே, பிறகு நடிகர் சங்கம் வராவிட்டால் என்ன? விஜயகாந்தை தமிழக மக்கள் தவறவிட்டுவிட்டார்கள் என பிரேமலதா சொன்னது ஒரு விதத்தில் சரிதான். விஜயகாந்தின் இறப்புக்கு வந்தவர்கள் ஓட்டு போட்டிருந்தாலே விஜயகாந்த் முதல்வராகியிருப்பாரே.
15 லட்சத்தை தாண்டியும் ரசிகர்கள் அவரது நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் உடலை பார்த்து நடிகர் விஜய் 10 வினாடிகள் நின்றது ஏன் என்றால் நன்றி. அவரால்தான் இன்று நாம் இந்த நிலையை அடைந்துள்ளோம் என நன்றிதான்! விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவரானதும் கடனை அடைத்தார். அதிலிருந்தே அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது.
விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத போது அவரை பார்க்க விட்டிருந்தாலே அவரது உடல் நலம் தேறி வந்திருப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications