சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலை புதிய மேல்சாந்தியாக பி.என் மகேஷ் தேர்வு
சென்னை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் கார்த்திகை 1ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் இருவரும் மேல் சாந்திகளாக ஐயப்பனுக்கும் மாளிகைபுரத்தம்மனுக்கும் சேவை செய்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மேல் சாந்தி என்பவர் அதிகாரம் மிக்கவர். ஐயப்பன் கோவில் யாத்திரை செல்லும் பக்தர்கள் மேல் சாந்தியை சந்தித்து ஆசி பெறுவார்கள். கோவில் நடை திறந்து பூஜைகளை தொடங்கி வைப்பது, நிர்வாகப்பொறுப்புகளை கவனிப்பது வரை அனைத்து அதிகாரமும் மேல் சாந்திக்கு உள்ளது.
வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரம் கற்றவர்கள் வேறு பிரபல கோவில்களில் மேல் சாந்தியாக பணியாற்றியவர்கள் மட்டுமே மேல்சாந்தியாக முடியும். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல் சாந்தியாக பணியாற்றுவது பாக்கியம் என்று பலரும் கருதுவார்கள். வரும் ஆண்டிற்கான மேல்சாந்தி பூஜை இன்று நடைபெற்றது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக திருநடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மேற்பார்வையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு சபரிமலை சந்நிதியில் மகா கணபதி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு உஷத் பூஜை நடைபெற்றது.
அடுத்த மாதமான கார்த்திகை 1ஆம் தேதி முதல் மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் தொடங்க உள்ளதைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், மாளிகப்புறம் சந்நிதிக்கும் மேல் சாந்திகள் தேர்வு காலை 8 மணியளவில் நடைபெற்றது.
ஐயப்ப சுவாமி கோயில் மேல்சாந்திக்கான இறுதிப் பட்டியலில் 17 பேரும், மாளிகப்புறம் சந்நிதிக்கு மேல் சாந்திக்கான இறுதிப் பட்டியலில் 12 பேரும் இடம்பெற்றுள்ளனர். சபரிமலை மேல்சாந்தி பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுக்களை வெள்ளிக்குடத்தில் போட்டு ஐயப்ப சுவாமி சந்நிதியில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்னர் மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது.
பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த குழந்தை வைதேஹ் வர்மா ஐயப்பன் கோயில் மேல்சாந்திக்கான சீட்டை தேர்வு செய்தார். பி.என் மகேஷ் பெயர் எழுதப்பட்ட சீட்டு வந்தது. இதனையடுத்து புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த நிருபமா ஜி வர்மா மாளிகப்புறம் மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார். மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட புதிய மேல்சாந்திகள் அடுத்த ஓராண்டுக்கு மேல்சாந்திகளாக இருப்பார்கள்.
ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து வரும் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை நடை சார்த்தப்படுகிறது. பின்னர் சித்திரை ஆட்ட விசேஷ பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கிறது. 11ஆம் தேதி சித்திரை ஆட்ட விசேஷ பூஜைகள் நடக்கின்றன. அன்று இரவு 10 மணிக்கு நடை சார்த்தப்படும்.
மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 17ஆம் தேதி காலை முதல் 41 நாள்கள் மண்டலகால பூஜைகள் நடைபெறுகின்றன. மண்டல கால பூஜைகளைப் புதிய மேல்சாந்திகள் செய்ய உள்ளனர்.
ஐயப்பன்கோயில், மாளிகப்புறம் சந்நிதிகளின் பழைய மேல்சாந்திகள் புதிய மேல்சாந்திகளிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு சன்னிதானத்தைவிட்டுக் கீழே இறங்கும் நிகழ்வு நடக்கிறது. மண்டலகால பூஜை நிறைவடைந்தபிறகு, சில நாள்களிலேயே மகரவிளக்கு பூஜைகள் தொடங்க உள்ளன. மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்கான முன்னேற்பாடுகளை சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications