சச்சின் டெண்டுல்கர்! கிரிக்கெட்டால் வாழ்ந்தவர் இல்லை.. கிரிக்கெட்டையே வாழ வைத்தவர்!
சென்னை: கிரிக்கெட்டால் பலர் ஃபேமஸ் ஆனார்கள், ஆனால் கிரிக்கெட்டே ஃபேமஸ் ஆனது சச்சின் டெண்டுல்கரால்தான். புகழுரை அல்ல.. இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்.
அது 1983.. இந்திய கிரிக்கெட்டின் விடிவெள்ளியாக தோன்றிய கபில்தேவ் தனது பொற்கரங்களில் உலக கோப்பையை ஏந்தி, இந்திய இளைஞர்களை கிரிக்கெட்டை நோக்கி ஈர்த்தார். ஆனால் அது கொஞ்ச காலம்தான். தனி மனித ஆராதனை கொண்ட இந்த தேசத்தில், இதன் பிறகு ஆராதிக்க எந்த ஒரு பிளேயரும் உருவாகவில்லை. பத்தோடு 11 எனும் வகையில் கிரிக்கெட் டீமில் இணைந்தார்கள், ஆடினார்களே தவிர ஆதர்ஷ நாயகன்.. மீட்பர்.. ஹீரோ உருவாகவில்லை.
இந்த பெரும் வறட்சியை போக்க ஒரு துளி மழை நீர் 1989ல் மண்ணில் வந்து விழுந்தது. ஆம்.. அதுதான் "கிரிக்கெட்டின் கடவுள்" என்று பிற்காலத்தில் ரசிகர்களால் போற்றி புகழப்பட்டு உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட்ட, சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த வருடம். நவம்பர் 15ம் தேதி கராச்சியில், பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக, பராக்கிரம பந்து வீச்சாளர்களுக்கு முன்பாக, பயமின்றி, களம் கண்டது 16 வயதேயான சச்சின் எனும் இளம் சிங்கம்.

சதங்களின் நாயகன்: பிற்காலத்தில் 49 ஒருநாள் போட்டி சதங்களை விளாசி உலக சாதனை படைத்தபோதிலும், இந்த லிட்டில் மாஸ்டர், 1994ம் ஆண்டுதான் முதல் சதத்தை பதிவு செய்தார் என்றால் நம்ப முடிகிறதா. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த சதத்தோடு இந்தியாவையும் வெல்ல வைத்தார். ராசியான அணி போல. அதன்பிறகு தொட்டதெல்லாம் துலங்கியது. இதில்தான் இளைஞர்களுக்கு ஒரு சேதி உள்ளது. என்னதான், ஆரம்பத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சாதிக்க முடியாவிட்டாலும், முயற்சியை மட்டும் விட்டுவிட கூடாது என்பதுதான் அது. உங்கள் கடமையை சரியாக செய்தால், என்றாவது ஒரு நாள் உங்கள் தலைக்கும் கிரீடம் தேடி வரும். அப்படித்தான் சச்சினும். அடுத்த 48 சதங்களை அவர் 385 போட்டிகளில் விளாசிவிட்டார். அதாவது, சராசரியாக ஒவ்வொரு 8.02 போட்டிக்கு ஒருமுறை சச்சின் பேட், சதத்தை ருசி பார்த்தது . இந்த கன்சிஸ்டன்சியை எந்த பிளேயராலும் தர முடியவில்லை.
இதுவரை உலக சாதனையாகவும் விளங்குகிறது. 1998ம் ஆண்டில் 9 சதங்கள் விளாசிய ஓராண்டு சாதனையையும் ஒருவராலும் முறியடிக்க முடியவில்லை.
கிரிக்கெட் கடவுள்: மேலே சொன்னதில், கவனிக்க வேண்டிய மிக மிக முக்கிய அம்சம், 18 முறை சச்சின் 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதம் விளாசும் முன்பாக அவுட்டாகியுள்ளார். 96 முறை அரை சதங்களை கடந்துள்ளார். அதையும் கூட்டி கழித்து பாருங்கள். இந்த புள்ளி விவரங்கள் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். அவர் சாதாரண மனிதன் இல்லை.. ரன் அடிக்கும் மிஷின்.. கிரிக்கெட்டின் கடவுள்.. டான் பிராட்மேனே தன்னை சச்சினின் ஆட்டத்தில் பார்ப்பதாக கூறினார் என்றால் நாம் குறிப்பிட்ட இந்த புகழ் வார்த்தைகள் எம்மாத்திரம். சச்சின் களம் வந்தாலே அன்று எதிரணியை சீர் குலைத்துவிட்டுதான் பெவிலியன் திரும்பியுள்ளார் என்பதுதான் இந்த புள்ளி விவரம் சொல்லும் பாடம்.
நடுங்கிய பவுலர்கள்: ஏதோ ஒரு சில மேட்சுகளில்தான் அவர் குறைந்த ரன்களில் திரும்பியுள்ளார். மற்றபடி அவரை கட்டுப்படுத்துவது அப்போதிருந்த வாசிம் அக்ரம், கர்ட்லி அம்ப்ரோஸ், கர்ட்னி வால்ஷ், வக்கார், அக்தர், சமிந்தா வாஸ், மெக்ராத், பிரெட் லீ, கில்லெஸ்பி, ஆலன் டொனால்ட், மலிங்கா போன்ற ஆபத்தான வேகப்பந்து, முத்தையா முரளிதரன், வார்னே, சக்லைன் முஸ்தாக், கார்ல் கூப்பர் போன்ற சுழற்பந்து ஜாம்பவான்களாலும் முடியாத விஷயமாகவே இருந்துள்ளது. சச்சினை தடுப்பதை விடுங்கள், அவரை பார்த்தாலே கைகள் நடுங்கும் நிலையில்தான் இதில் பெரும்பாலான பவுலர்கள் இருந்தனர்.
ஒற்றை நம்பிக்கை ஒளி: 1990களில் இந்திய அணிக்கு ஏகப்பட்ட பின்னடைவுகள். கபில்தேவ் கிரிக்கெட்டின் கடைசி அத்தியாயத்தில் இருந்தார். ஆதர்ஷம் என சொல்ல யாருமில்லாத நிலை. டாப் 5 விக்கெட்டுகளுக்கு பிறகு கடைசி 5 பிளேயர்களால் கையில் பேட்டை கூட ஒழுங்காக பிடிக்க தெரியாது. கடைசி 5 விக்கெட்டுக்கு 10 ரன்கள் வந்தாலே பெரிய விஷயமாக மாறிப்போனது. ஆனால், 1994ம் ஆண்டுக்கு பிறகு தனி ஒருவனாக இந்திய கிரிக்கெட் அணியை தாங்கி பிடித்தது சச்சின் மட்டுமே. எனவேதான், அவர் இருந்தால் அணி வெல்லும், அவுட்டானால் தோற்கும் என்ற முடிவுக்கு வந்த ரசிகர்கள், அவர் அவுட்டானால் டிவியையே ஆப் செய்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க கிளம்பினார்கள். 11 பேர் கொண்ட அணியல்ல, ஒற்றை சிங்கத்தால் செயல்பட்ட ஒரு அணியாகவே காட்சியளித்தது இந்திய கிரிக்கெட் அணி.
சச்சின் பற்றி பிற வீரர்கள் சொன்னது: எனவேதான் ஷேன் வார்னே சொன்னார் "என் காலத்தில் நான் பார்த்த சிறந்த பேட்ஸ்மேன்" என்று. க்ளென் மெக்ராத்: "சச்சினுக்கு எதிராக விளையாடும் போது, நீங்கள் வழக்கத்தைவிட வேறு மாதிரி யோசிக்க வேண்டும். நான் பந்து வீசிய சிறந்த பேட்ஸ்மேன் அவர். களத்திலும் வெளியிலும் அவர் உண்மையான ஜென்டில்மேன்." என்றார். சம காலத்தின் பேட்டிங் ஜாம்பவானான ப்ரைன் லாரா இன்னும் ஒருபடி மேலே போய் "சச்சின் ஒரு மேதை. அவர் முன்பாக, நான் ஒரு சாதாரண மனிதர்" என்று புகழ்ந்துரைத்து மகிழ்ந்தார். கர்ட்லி ஆம்ப்ரோஸ், "இவ்வளவு சிறந்த வீரரால் தோற்கடிக்கப்படுவதில் எனக்கு அவமானம் இல்லை, சச்சின் டான் பிராட்மேனுக்கு அடுத்த பெரிய பேட்ஸ்மேன்" என்றார்.

டிவியை ஆப் செய்தார்கள்: சச்சின் வளர்ந்த அந்த காலகட்டத்தில்தான், உலகமயமாக்கலால் இந்திய பொருளாதாரமும் வளர்ந்தது. டிவிகள் அதிகம் புழக்கத்திற்கு வந்தன. அந்த நேரத்தில் டிவியில் கிரிக்கெட் பார்க்க ஒரே காரணமாக இருந்தார் சச்சின். இன்று இத்தனை ஜோராக ஐபிஎல் நடத்த முடிகிறது என்றால் ரசிகர்களின் கிரிக்கெட் வெறிதான். அந்த வெறியை உருவாக்கி வளர்த்து வார்த்து எடுத்தது சச்சின் எனும் மாஸ்டர் பிளாஸ்டர் மட்டுமே. கிரிக்கெட்டால் பலர் வளர்ந்தார்கள், ஆனால் கிரிக்கெட்டையே வளர்த்தவர்.. ஏன்.. அதை உயிரோடு வைத்து இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க வைத்து கொடுத்தவர்தான் இந்த ஜாம்பவான்.
தோளில் சுமப்பது பாக்கியம் : 2000மாவது ஆண்டுக்கு பிறகுதான், படிப்படியாக சேவாக், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், தோனி போன்றோர் வருகையால் அணியின் வடிவம் மாறியது. சச்சின் அவுட்டானாலும் பந்து வீச்சாலோ அல்லது பிறரது பேட்டிங்காலோ அணி வெல்லும் சூழல் உருவானது. அதுவரை கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை தனது தோள்களில் மட்டுமே ஏந்தி வீர நடை போட்டவர்தான் இன்று 50வது பிறந்தநாள் காணும் சச்சின். எனவேதான், விராட் கோலி 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற கையோடு சொன்னார்.. இத்தனை வருடங்களாக இந்திய அணியை தோளில் சுமந்தார் சச்சின், அவரை எனது தோளில் சுமப்பது பாக்கியம்!












Click it and Unblock the Notifications