பாஜக உடன் கூட்டணி வைத்தால்தான் அதிமுக ஜெயிக்க முடியும்.. எடப்பாடி பழனிசாமிக்கு சைதை துரைசாமி அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டுமே 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துரைசாமி வலியுறுத்தி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வரும் நிலையில், சைதை துரைசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

aiadmk bjp saidai duraiswamy

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "9 ஆம் வகுப்பு படிக்கின்றபோதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்று வரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.கவின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன். பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுகவில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத் தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி ஜெ. அணி இணைப்புக்கும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில் தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுக-வுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.

1. புஎம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது.
2. பிரிந்து கிடக்கும் அதிமுக வினரை ஒற்றுமைப்படுத்துவது.
3. பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது.

அண்ணா திமுகவின் குலதெய்வம் எம்.ஜி.ஆர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துகளை எல்லாம் ஆட்சியில் செய்து காட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அராஜகம், அரசியல் கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய, அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள்? தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு? இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும். தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
2. இந்திரா காந்தி அம்மையார் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணாதிமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணாதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
3. இந்திராகாந்தி அம்மையார் மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் சென்று, 'என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார்.

4. அதன் பிறகு, காங்கிரஸுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று ஆதரவு கொடுத்தார்.
7. தி.மு.க கூட்டணியை பிரிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.

8. 1984-ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திராகாந்தி அம்மையார் நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தரச் சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார். 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.

இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும், எம்.ஜி.ஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைபிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...
மறப்போம், மன்னிப்போம்...

எனவே, ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல மத்திய பா.ஜ.க கட்சியோடு இணைந்து பலமான கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். 2026 தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியைக் காப்பாற்ற முடியாது என்று ஒவ்வொரு அடிமட்டத் தொண்டர்களும் வருத்தப்பட்டு, 'இந்தக் கருத்துகளை கட்சி நிர்வாகிகளிடம் எடுத்து சொல்லி மாற்றுவதற்கு முயற்சி எடுக்க மாட்டீர்களா?" என்று கேட்கிறார்கள். அவர்களின் ஆதங்கத்தையே இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

எம்ஜிஆரை முதன்மைப்படுத்துங்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளையும் திமுக எதிர்ப்பாளார்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள். பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து 2026-ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+