நானும் ஏ ஆர் ரஹ்மானும் இன்னும் கணவன்-மனைவிதான்! உடல்நல பாதிப்பு செய்தி கேட்டு சாய்ரா பானு உருக்கம்
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள சாய்ரா பானு, தன்னை முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நேற்று தான் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவருக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். தேவையான மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததை அடுத்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சாய்ரா பானு
ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து வாழ்வதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையே இப்போது ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று சாய்ரா பானு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் வாய்ஸ் நோட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஞ்சியோகிராஃபி செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். இறைவனின் அருளால், அவர் இப்போது நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது.
இன்னும் கணவன் மனைவிதான்
மேலும், நாங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். எனவே, நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு உடல்நிலை சரியில்லாததாலும், அவரை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்க விரும்பாததாலும் நாங்கள் பிரிந்திருக்கிறோம். ஆனால் தயவுசெய்து முன்னாள் மனைவி என்று சொல்லாதீர்கள்.
பிரிந்து மட்டுமே இருக்கிறோம்
நாங்கள் இப்போது பிரிந்திருக்கிறோம் அவ்வளவு தான்.. ஆனால் எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருடன் இருக்கும்.. நான் அனைவருக்கும், குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.. தயவுசெய்து அவரை அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள்.. அவரை கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி" என்று அதில் கூறியிருக்கிறார். சாய்ரா பானுவின் இந்த ஆடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அவரது செய்தித் தொடர்பாளர் இன்று காலை உறுதி செய்தார். ரஹ்மான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், நேற்று இரவு பரிசோதனைக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது. நீரிழப்பு பாதிப்பு காரணமாக ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு
ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானுவின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. கடந்தாண்டு இருவரும் பிரிந்து வாழப்போவதாக தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் அறிவித்தனர். இந்த தம்பதிக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் - மகன் ஏ.ஆர். அமீன், இரண்டு மகள்கள், கதிஜா ரஹ்மான் மற்றும் ரஹீமா ரஹ்மான் உள்ளனர்..
ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிந்து வாழும் போதிலும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தி கேட்ட சாய்ரா பானு இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை முன்னாள் மனைவி எனக் குறிப்பிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவமனை:
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நீர்ச்சத்து குறைபாடுகளுக்கான வழக்கமான பரிசோதனை முடித்து வீடு திரும்பினார்" என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications