மதுரை, கோவை மெட்ரோவில் நடந்த அதே தவறு.. விமான நிலையம்-கிளாம்பாக்கம் திட்ட அறிக்கையே மாறுது
சென்னை: மதுரை, கோவைக்கும் இதேபோன்று பழைய தரவுகள் அனுப்பப்பட்டதால்தான் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. இதே தவறு தான் தற்போது விமான நிலையம்-கிளாம்பாக்கம் திட்டத்திலும் நடந்துள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை திட்ட அறிக்கையில் மாற்றம் செய்ய மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சென்னை மாநகரம் முழுக்க மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையை தாண்டி செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கம் வரை 15. 46 கி.மீ. தொலைவுக்கு ரூ. 9,335 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடா்ந்து விமான நிலையம் - கிளாம்பாக்கம் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கோரி மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால் இந்த விரிவாக்க திட்ட அறிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதால், அதற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நகா்ப்புற வளா்ச்சித் திட்ட அறிக்கை 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் கிளாம்பாக்கம் விமான நிலையம் மெட்ரோ வழித்தட திட்டம் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சக விதிகள் அடிப்படையில் இல்லை. பொதுவாக நகர்ப்புற வளர்ச்சி திட்ட அறிக்கை 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தில் ஏற்படும் வளர்ச்சி திட்டம் தொடர்பான விரிவான இயக்க திட்டத்தில் மாற்றம் செய்து புதுப்பித்து சமர்பிக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் சாா்பில் இந்த நீட்டிப்பு திட்டத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். சந்தை மதிப்பு மறு ஆய்வு செய்யப்படுவதால், விரிவான திட்ட அறிக்கையில் எந்த மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே தாம்பரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று வரும் தயானந்த கிருஷணன் கூறுகையில் "மதுரை, கோவைக்கும் இதேபோன்று பழைய தரவுகள் அனுப்பப்பட்டதால்தான் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இதே நிலை தற்போது விமான நிலையம்-கிளாம்பாக்கம் திட்டத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டம் ஏதாவது ஒரு காரணத்திற்காக 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. எனவே விரைவாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications