தன்பாலின ஜோடி குழந்தையை தத்தெடுக்கலாமா? தலைமை நீதிபதி வைத்த ட்விஸ்ட்! மாறிய உச்சநீதிமன்ற தீர்ப்பு
டெல்லி: இந்தியாவில் ஓரின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், ‛‛ஓரின சேர்க்கை ஜோடி நல்ல பெற்றோராக இருக்க முடியும். அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம்'' என கருத்து தெரிவித்த அவர் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளை ரத்து செய்வதாக கூறிய நிலையில் கடைசியில் ட்விஸ்ட் ஏற்பட்டது.
இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுன்ல, எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சசான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. 3:2 என்ற வகையில் தீர்ப்பு அமைந்தது.
அப்போது 3 நீதிபதிகள் ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பளித்தனர். அதோடு ஓரினச்சேர்க்கை திருமணத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்பது நீதிபதிகளின் கருத்தாக உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி ரவீந்திர பட்டின் கருத்துடன், நீதிபதி நரசிம்ஹாவும் உடன்படுவதாக கூறியிருக்கிறார். இதன்மூலம் ஓரின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைந்துள்ளது.
இருப்பினும் இன்றைய தீர்ப்பின்போது ஓரின சேர்க்கை ஜோடி நல்ல பெற்றோராக இருக்க முடியும். அவர்கள் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்க முடியும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். மேலும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதியை அவர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஓரினச்சேர்க்கை ஜோடிகள் நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று நாம் கருத முடியும் என்பதை நாம் கருத்து அளவில் மட்டுமே வைத்திருக்க முடியாது. அவர்கள் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் (Central Adoption Resource Authority or CARA) விதிமுறையை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியும்.

திருமணமாகாத ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதை சட்டம் தடுக்கவில்லை. ஆனாலும் திருமணமாகாத ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்கும் முறையில் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தனது அதிகாரத்தை மீறியுள்ளது. இது இந்திய அரசியலமைப்பின் 15வது சட்டப்பிரிவை மீறும் வகையில் உள்ளது. இதனால் ஓரினச்சேர்க்கை ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதை தடுக்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகள் ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
இதன்மூலம் திருமணமாகாத மற்றும் ஓரின சேர்க்கை ஜோடிகள் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியும் என்பதை அவர் உறுதி செய்தார். அதேபோல் நீதிபதி சஞ்ய் கவுலும் இதனை ஆதரித்து தீர்ப்பு வழங்கினார். ஆனால் நீதிபதிகள் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி, நரசிம்மா ஆகியோர் மாற்றுத்தீர்ப்பை வழங்கினர்.
திருமணமாகாத மற்றும் ஓரினச்சேர்க்கை ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியாது என 3 நீதிபதிகளும் கூறினர். இதையடுத்து 3:2 என்ற அடிப்படையில் ஓரினச்சேர்க்கை ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் சிஏஆர்ஏ எனும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது நம் நாட்டில் குழந்தை தத்தெடுப்புகளை ஒழுங்குப்படுத்தி கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications