"எல்லா வருஷமும் இதேதான் சொல்றாங்க".. கொதிக்கும் மக்கள்.. தத்தளிக்கும் சிங்கார சென்னை.. கலக்கம்!
சென்னை: சென்னையில் பல இடங்களில் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி உள்ள நிலையில் மக்கள் பலர் மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது.
இது இன்னும் சில மணி நேரங்களில் காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் நேற்று மதியம் சென்னையில் தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு தீவிரமாக பெய்து வருகிறது.

வெள்ளம்
சென்னையில் பல இடங்களில் இந்த மழை காரணமாக வெள்ளம் தேங்கி உள்ளது. முக்கியமாக வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. தாம்பரம், ஆவடி, வேளச்சேரி, தி நகர், அடையாறு ஆகிய பகுதிகள்தான் இந்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

முடியவில்லை
பல இடங்களில் இரண்டு நாட்களாக மோட்டார் போட்டு நீர் இறைத்தும் கூட தண்ணீர் வெளியேறவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2015ல் சென்னையில் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் அதன்பின் வெள்ளம் ஏற்படாமல் இருக்க பல்வேறு மாற்றங்கள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கி பல புனரமைப்பு பணிகள் வரை செய்யப்பட்டும் கூட சென்னையில் இந்த முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் குற்றச்சாட்டு
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முந்தைய அதிமுக அரசின் மெத்தனப்போக்குதான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். 2015 வெள்ளத்திற்கு பின் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சென்னையில் புயல் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டது. இந்த குழாய்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் அமைக்கப்பட்டது. ஆனாலும் இந்த முறை சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Recommended Video

என்ன சொன்னார்
பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. நிறைய ஊழல் நடந்துள்ளது. தி நகரில் அதிக அளவில் நீர் தேங்க இந்த முறைகேடுகள்தான் காரணம். நாங்கள் கடந்த 6 மாதத்தில் 60 சதவிகித மாற்றங்களை செய்துள்ளோம். சென்னையில் மழை முடிந்த பின் மொத்தமாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வெள்ளம் இனி ஏற்படாத வண்ணம் மாற்றம் செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் முந்தைய அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்கள் குற்றச்சாட்டு
இந்த வெள்ளம் குறித்து குற்றச்சாட்டு வைத்து உள்ள சென்னை மக்கள், எல்லா வருடமும் இதே கதையாக இருக்கிறது. அரசுகள் மாறினாலும் நிலைமை மாறவில்லை. எங்களின் கருத்துக்களை யாரும் கேட்கவில்லை. இந்த புதிய அரசாவது எங்களுக்கு ஏதாவது செய்கிறதா என்று பார்க்க வேண்டும். நாங்கள் வரி கொடுக்கும் குடிமகன்கள்.

சாலைகள்
எங்களுக்கு நீர் தேங்காத சாலைகள் தேவை. அதற்குத்தான் மாநகராட்சிக்கு வரி கட்டுகிறோம். எல்லா வருடமும் இதே கதையை கேட்க நாங்கள் வரி கட்டவில்லை. புதிய அரசு அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டும். அதற்கு ஏற்றபடி அறிவியல் முறைப்படி திட்டமிட்டு வடிகால்களை அமைக்க வேண்டும். மீண்டும் ஏரிகளை உருவாக்க முடியாது என்பதால் வேறு விதமான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரணம் என்ன
சென்னை மாநகராட்சி உருவாக்கி உள்ள வடிகால் அமைப்புகள் பெரிய மழையை தாங்கும் அளவிற்கு இல்லை. பெரிய மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் வகையில் இந்த வடிகால்கள் அமைக்கப்படவில்லை என்பதுதான் வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. புதிய அரசும் மாநகராட்சி நிர்வாகிகளும் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications