தொடரும் சனாதனம் சர்ச்சை.. உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கை நாளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்!
சென்னை: தலைநகர் சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்டில் நாளை விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் இம்மாத தொடக்கத்தில் சென்னையில் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது தான் தேசியளவில் சர்ச்சையானது.

இதற்கிடையே இந்த மாநாடு இந்து மதத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் சனாதன தர்மத்தின் மீது வெறுப்புணர்வைப் பரப்பு இது நடத்தப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை: இதற்கிடையே நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை நாளை விசாரிக்க உள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இதை அவசர மனுவாக விசாரிக்க மறுத்த சந்திரசூட், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரான ஜெகநாத் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த செப். 2ஆம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு இந்து மதத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகச் சாடினர். மேலும், இந்து மதத்தை அவமானப்படுத்தவும், மதத்தைப் பற்றி இழிவான கருத்துகளைப் பரப்பவும் இந்த மாநாடு நடத்தப்பட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வெறுப்பு பேச்சு: இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் தான் உதயநிதி, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்ற நோய்களைப் போலச் சனாதன தர்மத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். மேலும், இதில் பேசிய திருமாவளவன் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது வெறுப்புப் பேச்சின் க்ளாசிக் எடுத்துக்காட்டு என்றும் இந்துக்களுக்கு எதிராக இத்தகைய வெறுப்பை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், உதயநிதி அல்லது மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் இதன் மூலம் இந்துக்களுக்கு எதிராகப் பாரபட்சம், பாகுபாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

நாளை விசாரணை: மதச்சார்பற்ற நாட்டில் இதுபோல நடப்பது துரதிருஷ்டவசமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பதையே இது காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பின்படி வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும். இருப்பினும், இப்போது வரை தமிழ்நாடு அரசு வெறுப்பு பேச்சு விவகாரத்தில் நோடல் அதிகாரியை நியமிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்படையாக இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சைப் பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தான் நாளை விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications