தீய சக்தி சந்தானம்.. அன்றே வறுத்தெடுத்த பிடிஆர்.. வடக்குப்பட்டி ராமசாமி சர்ச்சை.. பரவும் பழைய வீடியோ
சென்னை: "சாமியே இல்லை என்று ஊருக்குள் சொல்லிக்கிட்டு திரிஞ்ச அந்த ராமசாமி இல்லை நான்" என்று நடிகர் சந்தானம் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையானது. அதை சந்தானம் உடனடியாக நீக்கிவிட்டார். இந்த நிலையில் நடிகர் சந்தானம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் பழைய வீடியோ ஒன்று இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி.. 1970களில் நடப்பது போன்ற கதைக்களத்தில் நடித்திருக்கிறார். இதில் சந்தானத்துடன் மேகா ஆகாஷ், ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மெட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தானத்தை வைத்து ஏற்கனவே டிக்கிலோனா என்ற திரைப்படத்தை இயக்கிய, இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரில், 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ' என்று கேட்பார்கள்.. அதற்கு சந்தானம் நான் இல்லை என்று பதில் அளிப்பார்.. ட்ரெய்லர் வந்த போதே, சமூகவலைத்தளங்களில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வசனங்கள் பெரும் பேசுபொருளானது. இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில் தை பொங்கல் திருநாளையொட்டி நேற்று நடிகர் சந்தானம் ஒரு வீடியோ வெளியிட்டார். சந்தானம் தனது வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தினை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.. எப்படி என்றால், 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் இடம்பெற்றும் 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ என்ற ஆடியோவுக்கு நா அந்த ராமசாமி இல்ல' என பதில் கூறும் டப்ஸ்மாஷ் ஆக பொங்கல் விழா வீடியோவை நடிகர் சந்தானம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
சந்தானத்தை அன்று விமர்சித்த பிடிஆர் #VadakkupattiRamasamy #Santhanam #ptr pic.twitter.com/IBMz9CHh1U
— velmurugan (@velmurugantheni) January 16, 2024
இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே பெரும் சர்ச்சை எழுந்தது. திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களின் ஆதரவாளர்கள் சந்தானத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அதேநேரம் பாஜக ஆதரவாளர்கள் சந்தானத்தின் வீடியோவிற்கு ஆதரவாக கருத்துகளை முன் வைக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் எக்ஸ் தளமே சந்தானத்திற்கு எதிராகவும், ஆதராகவும் திரும்பியது. இந்த விவகாரம் பெரிதானதை பார்த்த சந்தானம், தனது ட்வீட்டர் பதிவை சந்தானம் நீக்கிவிட்டார்.
எனினும் நடிகர் சந்தானத்தின் செயலுக்கு பலரும் கண்டனமும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். பெரியாரை விமர்சித்த சந்தானத்தின் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் கண்டிப்பாக வெளியிட்டுத்தான் ஆக வேண்டுமா என்று திமுகவினர் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழலில் நடிகர் சந்தானம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் பழைய வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் சந்தானத்தை தீய சக்தி என்று பேசியிருப்பார்.. மதநல்லினக்கத்தை உடைத்து, கலவரத்தை உருவாக்கும் தீய சக்தியாக தான் கருதுவதாகவும், அதனால் தான் தனக்கு இவ்வளவு கோபம் வருவதாகவும் கூறியிருப்பார்.


Click it and Unblock the Notifications
