பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ
முனிச்: வேலை செய்யாத மேலாளர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கப்பட்டதால், எஸ்ஏபி ஊழியர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP, தனது புதிய போனஸ் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஊழியர்களிடையே கடும் அதிருப்தியைச் சந்தித்துள்ளது. திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் வெற்றி பெறவும் முயலும் பிரபல மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி நிறுவனத்திற்கு, இந்த போனஸ் சர்ச்சை ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. என்ன பிரச்சனை என்பதை விரிவாக பார்ப்போம்.
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP, தனது மேலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்காக ஒரு புதிய போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டத் தவறிய மேனேஜர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான யூரோக்கள் போனஸாக வழங்கப்பட்டது. இது நிறுவனத்திற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாரபட்சமான போனஸ் முறை
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, நிறுவனத்தின் புதிய ஊதியக் கட்டமைப்பில் பெரும் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களது இலக்குகளை முழுமையாக அடையாவிட்டாலும், பங்குச் சந்தை சார்ந்த ஊக்கத்தொகைகளைப் பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர்.
அத்துடன் கீழ்நிலை ஊழியர்கள் போனஸ் பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடக் கூடுதலாக உழைத்து சாதனை படைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த முரண்பாடு சாதாரண ஊழியர்கள் மற்றும் சில மேலாளர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது.
தலைமை மீதான நம்பிக்கை சரிவு
இது தொடர்பாக நிறுவனத்திற்குள் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தலைமை நிர்வாகக் குழுவின் மீதான ஊழியர்களின் நம்பிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்தது. அந்த ஆய்வில், ஏப்ரல் 2021-ல் 80% ஆக இருந்த நம்பிக்கை, தற்போது 59% ஆகக் குறைந்துள்ளது. ஏற்கனவே பணி நீக்கம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த ஊழியர்களுக்கு, இந்த போனஸ் சர்ச்சை கூடுதல் எரிச்சலை ஊட்டியிருக்கிறது.
நிர்வாகத்தின் பதில் என்ன
சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, SAP நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியன் க்ளீன், இந்த ஊதியக் கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். SAP நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஊதிய முறையில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் சமமான மற்றும் போட்டித்திறன் மிக்க ஊதியம் வழங்குவதே எங்கள் முன்னுரிமை" என்று கூறியுள்ளார்.
தலைமை மாற்றங்களும் சவால்கள்
கடந்த 6 ஆண்டுகளில் SAP நிறுவனத்தில் பல முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறி உள்ளார்கள். ஜெனிபர் மோர்கன், லுகா முசிக் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பாளர்கள் 2023-க்குப் பிறகு நிறுவனத்தை விட்டுச் சென்றுள்ளனர். இது தலைமைத்துவத்தில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் பாரம்பரிய மென்பொருள் சந்தையில் SAP கடும் போட்டியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டை விட நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 135 பில்லியன் யூரோக்கள் சரிவடைந்திருக்கிறது.
தலைசுற்ற வைக்கும் சிஇஓ சம்பளம்
SAP நிறுவனம் இவ்வளவு சிக்கல்களைச் சந்தித்தாலும், சிஇஓ கிறிஸ்டியன் க்ளீன் 2025-ஆம் ஆண்டில் 16.2 மில்லியன் யூரோக்களை (சுமார் 173.30 கோடி கோடி) வருமானமாகப் பெற்றுள்ளார். இது முந்தைய ஆண்டை விட 14% குறைவு என்றாலும், ஊழியர்களின் போனஸ் பிரச்சனையோடு ஒப்பிடும்போது அதிகம் ஆகும்.இது தான் தற்போது பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் வெற்றி பெறவும் முயலும் SAP நிறுவனத்திற்கு, இந்த போனஸ் சர்ச்சை ஒரு பின்னடைவாகக் வந்து நிற்கிறது. ஊழியர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே அந்நிறுவனத்தின் தற்போதைய மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications