வணிகர்களின் எதிரி பாஜக? சரத்குமார் செய்தது பெரிய துரோகம்! பொங்கும் தொண்டர்கள்! பறக்கும் மீம்ஸ்!
சென்னை: சரத்குமார் நாடார் சமுதாயத்திற்குத் துரோகம் செய்துவிட்டார் என்று எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு, பாஜகவில் அதிரடியாக போய் இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார்.

அவரது இந்த முடிவால் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக சமகவில் பயணித்த தொண்டர்கள் பல ஆயிரம் பேர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
இரவு 12 மணிக்கு தனக்கு இப்படி ஒரு யோசனை வந்ததாகவும், தனது மனைவியிடம் கேட்டுவிட்டு கட்சியை பாஜகவில் இணைத்ததாகவும் சரத்குமார் பேசிய கருத்தை வைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதற்கு இன்று பதிலளிக்க முன்வந்த சரத்குமார், 'ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லலாம். மனைவியிடம் பேசியதைப் பற்றி சிலர் திரைக்குப் பின் நின்றுகொண்டு விமர்சித்து வருவதாகவும், மனைவியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க வேண்டும்?’ என்று கூறியிருக்கிறார்.

சரத்குமார் தனது கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்தது குறித்து மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா, “இது எல்லாம் ஒரு பிரேகிங் நியூஸா? இதனால் 8% வாக்குகள் பாஜகவுக்குக் கூடுதலாகக் கிடைத்து விடுமா?” என்று கிண்டலடித்து இருக்கிறார்.
பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “அவருக்கு பாஜகவில் தேசிய செயலாளர் பதவி கிடைக்கும். ஒரு தொகுதியில் நிற்பதற்கு எம்.பி. சீட்டு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
“நான் பிரதமராகக் கூடாதா? என்று சீரியசாக கேட்ட சரத்குமார் போய் பாஜகவில் இணைந்திருக்கிறார். நீங்கள் எப்போது முதலமைச்சர் ஆகப் போகிறீர்கள் என்று அவரது மாமியார் கேட்டதாகச் சொன்னவர், இன்று பாஜகவுக்குப் போய் இருக்கிறார்” என்று விமர்சித்திருக்கிறார் பத்திரிகையாளர் லக்ஷ்மணன்.

இவர்களைத் தாண்டி ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் சரத்குமார் குறித்த மீம்ஸ் பறந்து வருகின்றன.
சமகவில் பல ஆண்டுகளாகப் பயணித்து வந்த முன்னாள் நிவாகி லூர்து என்பவர் கொதித்துப் போய் ஆவேசமாகப் பேசி இருக்கிறார்.
“தென்காசி தொகுதியில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இவரை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும். நமது சமுதாயத்திற்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக இரவு பகல் பார்க்காமல், தொழிலை ஒழுங்காகக் கவனிக்காமல் உழைத்தோம்.

இவர் ஒரு நடிகராக இருக்கிறார். இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே இவரை வைத்து ஒரு அரசியல் அமைப்பைக் கட்டமைத்து வளர்ந்துவிடலாம் என்று இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தோம்.
ஆனால், இவர் ஒரு சீட்டுக்கு விலை போய்விட்டார். நாடார் சமுகத்திற்காக ஒருவர் தேவை என்பதற்காக இவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
ஏதோ கூட்டணி குறித்துப் பேசி வருவதாகச் சொன்னார். இப்போது திடீரென்று கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இவரது நடவடிக்கை நாடார் சமுதாயத்தையே இழிவுபடுத்தி விட்டது. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

அவருடன் கட்சியில் பயணித்தவர்கள் 99% நாடார்கள்தான். அவரை ஆதரித்தவர்களும் நாடார்கள்தான். 1% வேறு சமுகத்தைச் சேர்ந்த ரசிகர்கள் இருந்திருக்கலாம். மற்றபடி அவருக்குச் செலவழித்தவர்கள் அனைவரும் நாடார்கள் தான்.
அவர் இன்று பணம் வாங்கிக் கொண்டு பாஜகவுக்குப் போய்விட்டார் என்றுதான் சொல்கிறார்கள். கூட இருந்த அனைவரையும் தெருவில் நிறுத்திவிட்டுச் சென்று விட்டார் என்றுதான் சொல்கிறார்கள். நான் கூட அவரை அப்படித்தான் பார்க்கிறேன்” என்கிறார்.

சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன்,“இதுவரை அவர் நாடார் சமுகத்திற்காக எதையும் செய்யவில்லை. பாஜக கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி மூலம் வணிகர்கள் படும்பாடு பெரும்பாடாக உள்ளது. நடுத்தர வணிகர்கள் எல்லாம் கொதித்துப் போய் உள்ளனர்.
இந்தநிலையில் அவர் பாஜகவுக்கு சரத்குமார் ஆதரவு கொடுத்துள்ளார். வணிகர்களின் எதிரியாக பாஜக உள்ளது. அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார் சரத்குமார்.

இது மிகப்பெரிய துரோகம். எங்கள் சமுக மக்கள் கூட அவரை ஆதரிக்க மாட்டார்கள். சுயநலத்திற்காக ஆதாயத்திற்காக பாஜகவில் இணைந்துள்ளார். அவர் எங்கு நின்றாலும் வெற்றி பெறவே முடியாது.
எங்கள் சமுதாய மக்களை அவர் அடமானம் வைத்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications