‘நாட்டாமை’ குடும்பம் என்ட்ரி; ராதிகா பக்கம் அண்ணாமலை? பயந்துபோன குஷ்பு? பாஜக உட்கட்சி பூசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீரென்று தேசிய மகளிர் ஆணையத்தின் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி வேலைக்கு திரும்ப வேண்டிய அளவுக்கு குஷ்புக்கு என்ன நெருக்கடி வந்தது? அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார்? அதற்கு உள்ளாக இருக்கும் அரசியல் என்ன?

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நடிகை குஷ்பு தனது பதவியை ராஜினாமா செய்ததற்குப் பின்னால் பலவேறு விசயங்கள் பேசப்பட்டு வருகின்றன. தனது பதவியை ராஜினாமா செய்வதாக குஷ்பு, கடந்த ஜூன் மாதமே கடிதம் எழுதி இருந்த நிலையில் அவரது கடிதம் கடந்த 14 ஆம் தேதி ஏற்கப்பட்டுள்ளதாகக் குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை அறிவித்தது. இந்தப் பதவியில் குஷ்பு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்தப் பதவியில் அவர் நீடித்தார்.

Khushbu Annamalai

2010 இல் திமுக, அதன்பின்னர் 2014இல் காங்கிரஸ் அதனை அடுத்து 2020 ஆம் பாஜக என அவர் கட்சி விட்டு கட்சி மாறிவந்தார். அவர் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குச் சென்ற போது மிகக்கடுமையாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கொள்கைப் பிடிப்பு இல்லாமல் அவர் பதவிக்காக இப்படி கட்சி தாவி வருவதாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு பாஜகவின் அலுவலகமான கமலாலயத்திற்கு அவர் வருவதைத் தவிர்த்தார். இந்நிலையில்தான் பதவியை ராஜினாமா செய்த மறுநாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கட்சி அலுவலகத்திற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் குஷ்பு. அன்று அவரது முகத்தில் சுதந்திரம் பெற்ற உணர்வும் மகிழ்ச்சியும் தென்பட்டது. இன்னும் சொல்லப் போனால், கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடவேண்டிய மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்திலிருந்தே அவர் பாதியில் வெளியேறினார். அதற்கு உடல்நலக்குறைவு காரணம் என்று விளக்கமும் அளித்திருந்தார்.

கட்சி அலுவலகம் வந்திருந்த குஷ்பு, "பல நாட்கள் கழித்து இன்றுதான் அண்ணாமலையைப் பார்த்தேன்" என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டிருந்தார். ஒரு மாநிலத் தலைவருடன் இவருக்கு உள்ள தொடர்பு இந்தளவில்தான் உள்ளதா என்ற கேள்வி இதன்மூலம் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக இந்தச் சந்திப்பின்போது அவர் திமுகவை விமர்சித்தார். தன்னைப் பார்த்தாலே திமுகவுக்குப் பயம் இருக்கிறது என்றும் சொன்னார்.

மகளிர் ஆணையத்தின் பதவியிலிருந்ததால் இத்தனை நாட்களாகக் கட்சிக்காக வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்று ஒரு வாதத்தை முன்வைத்துள்ள குஷ்பு, இனிமேல் தான் கட்சிக்காகக் குரல் கொடுப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார். கட்சிக்காக உழைக்க வேண்டிய தருணம், நேரம் தேர்தல் களம். அப்படி ஒரு வாய்ப்பு 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் கிடைத்தபோது அதை அவர் மருத்துவக் காரணங்களைக் கூறிவிட்டு விலகிக் கொண்டார் என்ற கேள்வி சில எதிர்க்கட்சியினரால் இங்கே எழுப்பப்படுகிறது.

இந்தப் பதவியின் அதிகாரம் என்ன? அதன் மூலம் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன என்பதை ஆரம்பத்தில் குஷ்பு உணர்ந்திருக்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வியடைந்த குஷ்பு, தனக்கு தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று நம்பியே மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை மகிழ்ச்சியாக ஏற்றார். ஆனால், அந்தப் பதவி மிகப்பெரிய அதிகாரம் கொண்டது அல்ல. மேலும் அதன் மூலம் கிடைக்கும் வசதிகள் கூட ஆடம்பரமானதல்ல என்பதைப் புரிந்துகொண்டார்.

Khushbu Annamalai

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் அவர் மகளிர் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு விமானப் பயணத்தை அடிக்கடி மேற்கொண்டார். அந்த விமானப் பயணம் சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் அளவுக்கே நிதி வழங்கப்பட்டது. ஆணையம் முதல் வகுப்பில் பயணம் மேற்கொள்ள அனுமதி தரவில்லை. புகழ்மிக்க நடிகையான குஷ்பு, சாதாரண எக்னாமிக் கிளாசில் பயணிப்பதை விரும்பவில்லை. ஒரு நாளைக்கு தனது கால்ஷீட் மூலம் பல லட்சங்களைச் சம்பளமாகப் பெறும் அளவுக்குச் செல்வாக்கு உள்ள நடிகையான அவருக்குச் சம்பளங்கள் கூட சில ஆயிரங்களைத்தான் இந்த ஆணைய பதவி அளித்தது.

இப்படிப் பல விதங்களில் தனது செல்வாக்கை இழந்து, இந்தப் பதவியில் நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்த குஷ்பு ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார். அவர் சொல்வதைப் போல கட்சி மீது உள்ள பாசம் எல்லாம் ஒன்று இல்லை என்று சக பாஜக நிர்வாகிகளே ஒரு தகவலை தட்டி விடுகிறார்கள். தேசிய ஆணைய பதவி என்றவுடன் அதிகாரம் அதிகம் இருக்கும் என குஷ்பு முதலில் நம்பி இருக்கிறார் என்று முன்வைக்கப்படும் வாதம் ஏற்கும்படியாக உள்ளது.

தேசிய தூய்மைப் பணியாளர்கள் வாரிய தலைவர் பதவி சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவரை சிபாரிசு செய்தவர் வானதி சீனிவாசன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதவி அதிகாரம் மிக்க ஒன்றாகும். குஷ்பு பதவியைவிடப் பல மடங்கு உயர்ந்தது. ஒரு மாநில அமைச்சரின் அதிகாரத்திற்கு இணையானது இந்தப் பொறுப்பு. இதைப் போன்ற ஒரு பதவியை எதிர்பார்த்து தேசிய மகளிர் ஆணையத்திற்குள் சென்ற குஷ்புக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.

இப்படிப் பல தரப்பையும் எடைபோட்டுப் பார்த்த குஷ்பு, மீண்டும் கட்சி பணிக்குத் திரும்புவதே நல்லது என்றும் அதன் மூலம் மீடியாவில் லைம் லைட் ஆகவாவது இருக்கலாமே என்ற முடிவுக்கு வந்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தில் அவர் இருந்தபோது ஊடகங்களைச் சந்திப்பதும் கருத்துச் சொல்வதும் முடியாத காரியம். அதற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகாவின் அனுமதியைப் பெற வேண்டும். அங்கே அவ்வளவு சுதந்தரமாக இயங்க முடியாமல் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டிருந்தன. அதை மறைமுகமாக உணர்த்தவே அவர் சுதந்தர தின விழாவில் தான் விடுதலைப் பெற்றதைப் போல மீண்டும் கட்சிக்கு திரும்பி இருக்கிறார் என்றும் ஒரு பகுதியினர் தகவல் சொல்கின்றனர்.

இதை எல்லாம் விட, தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில மாதங்கள் வரை குஷ்புதான் அதிக செல்வாக்கு மிக்க நடிகையாக இருந்துவந்தார். அந்த இடத்திற்கு இப்போது ஒரு போட்டி வந்துவிட்டது. மக்களவை தேர்தலை ஒட்டி ராதிகாவும் சரத்குமாரும் பாஜகவுக்குள் வந்துவிட்டனர். வந்தது மட்டுமல்ல; வந்த வேகத்திலேயே சீட் பெற்று விருதுநகரில் களம் கண்டுவிட்டார் ராதிகா. மேலும் 'நாட்டாமை'யின் செல்வாக்கு மோடி வரை சென்றுவிட்டது. இனியும் பொறுமை காத்தால், கட்சி தன்னை மறந்தே விடும் என்ற நிலைக்கு குஷ்பு தள்ளப்பட்டதாக அவரை அறிந்த நண்பர்கள் ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், ராதிகா மற்று சரத்குமாருக்கு பாஜகவில் அதிக முக்கியத்துவத்தை அண்ணாமலை அளிக்கிறார். அதேநேரத்தில் குஷ்பு கட்சி ரீதியாக அண்ணாமலையுடன் எந்தத் தொடர்பிலும் இல்லாமல் இருந்தார். இது அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறும் என அவரது ஆதரவாளர்கள் எடுத்துக் கொடுத்துள்ளனர். அதில் கொஞ்சம் அல்ல, அதிகமாகவே குஷ்பு ஆடிப்போய் இருக்கிறார். எனவேதான் 'நாட்டாமை' குடும்பம் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் பாஜகவின் தனது நிலை என்ன ஆகும் என்று யோசித்து யோசித்துப் பார்த்து இப்போது கமலாலயம் பக்கம் கால் வைத்திருக்கிறார் குஷ்பு. இப்படித்தான் பாஜக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+