அதிமுகவை மட்டும்தான் விஜய் குறி வைக்கிறாரா? உண்மை இதுதான்
சென்னை: அதிமுகவை மட்டுமே குறி வைத்து விஜய் விமர்சனம் செய்து வருகிறாரா என்ற கேள்வியை அக்கட்சியை சேர்ந்தவர்கள் பொது வெளியில் முன் வைத்து வருகிறார்கள்.
சர்கார் திரைப்படத்தில் காட்டப்பட்ட குறியீடுகள் ஆளும் அதிமுக அரசில் உள்ளவர்களை, அதிலும் குறிப்பாக, அமைச்சர்களை கோபப்படுத்தியுள்ளது. கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் என இந்த படத்திற்கு எதிராக கொந்தளிக்கும் அமைச்சர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால், நடிகர் விஜய் அதிமுகவை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்கிறார்கள் திரைப்பட உலகத்தினர்.
[சர்கார் படத்திற்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, இந்த காட்சிகள்தான் காரணம்? ]

கத்தி திரைப்படம்
இதே ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும், விஜய் கூட்டணியில் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம், தீபாவளிக்கு வெளியான 'கத்தி' திரைப்படத்தில், 2ஜி என்றால் என்ன தெரியுமா, வெறும் காற்றிலேயே ஊழல் செய்யும் நாடு இது. தண்ணிதானே என்று சாதாரணமாக பேசாதீர்கள் என்று, காட்சி இடம் பிடித்திருக்கும். 2ஜி வழக்கு விவகாரம், அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்த காலகட்டம் அது. திமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் சிலர் வழக்கை எதிர்கொண்டிருந்தனர். வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோதே, இவ்வாறு ஒரு வசனத்தை விஜய் பேசி நடத்திதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், திமுக அதற்கு பெரிதாக எதிர்வினை காட்டவில்லை. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிறகு நீதிமன்றத்தால் விடுதலையும் செய்யப்பட்டனர்.

மெர்சல் படத்தில் பாஜக
2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில், வெளியான திரைப்படம், 'மெர்சல்'. இந்த படத்தில் இடம்பெற்ற சில வசனங்களில் புள்ளி விவரங்களில் தவறு இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக வசனம் பேசினார் விஜய். பண மதிப்பிழப்பை கேலி செய்யும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தது.

எதிர்வினையாற்றிய பாஜக
மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய் வசனம் பேசியதாக கூறி, எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோர், விஜய்க்கு எதிராக எதிர்வினையாற்றினர். இதனால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தது. படமும் வெற்றி பெற்றது. முதலில் திமுக பிறகு பாஜக ஆட்சி காலங்களில் நடந்த சம்பவங்களை விமர்சனம் செய்தவர்தான் விஜய்.

பாஜக இல்லை
இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில், அதிமுக அரசை அவர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த படங்களை போலன்றி, இம்முறை மறைமுகமாகவே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் சர்கார் என்ற படத் தலைப்பை பார்த்து, படத்தில் மோடி சர்காரைதான் கிண்டல் செய்யப்போகிறார்கள் என்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம். இந்த படத்தில் மத்திய அரசு குறித்தோ, பாஜக கொள்கை பற்றியோ காட்சிகள் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications