நைட்டியில் ஜெ வீடியோ.. வெற்றிவேல் ரிலீஸ்.. நான் எவ்ளோ வேதனையடைந்தேன் தெரியுமா.. சசிகலா குமுறல்
சென்னை: நைட்டியில் ஜெயலலிதா இருந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட போது நான் மனவேதனை அடைந்தேன் என சசிகலா குமுறியுள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா கூறிய பிரமாண வாக்குமூலத்தில், அப்பல்லோவில் அக்கா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் டிடிவி தினகரன் மூலம் என்னிடம் கேட்டார். அதாவது அக்காவின் மரணத்தை களங்கப்படுத்தும் அளவுக்கு சிலர் நடந்து கொள்வதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதன் பேரில் நான் வீடியோக்களை பென்டிரைவில் காப்பி செய்து தினகரனிடம் கொடுத்தேன்.
தினகரனும் வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெற இரு தினங்களுக்கு முன்னர், ஓபிஎஸ் தரப்பினர் அக்கா அவர்கள் பாடையில் இருப்பது போன்ற ஒரு பொம்மையை வைத்து பிரச்சாரம் செய்தனர்.

வெற்றிவேல்
இதனால் மனம் உடைந்த வெற்றிவேல் தன்னிச்சையாக என் அனுமதியின்றியும் தினகரனின் அனுமதியின்றி, எங்கள் வார்த்தைகளை மீறி ஏப்ரல் 2017 முதல் தன் வசம் வைத்திருந்த அக்கா அவர்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ பதிவுகள் சிலவற்றை ஒரு பென்டிரைவில் காப்பி செய்து 20.11.2017 அன்று சட்டமன்ற வளாகத்தில் ஊடகங்களில் வெளியிட்டார்.

டிடிவி தினகரன்
இதை கேள்விப்பட்டு டிடிவி தினகரன் வெற்றிவேலிடம் கோபப்பட, டிடிவி தினகரனிடம் பெற்ற பென்டிரைவை வெற்றிவேல் ஒப்படைத்துள்ளார். மேலும் மன உளைச்சலில் இவ்வாறு செய்துவிட்டேன், அம்மாவின் மரணத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை. அம்மாவின் காலை வெட்டி விட்டனர். அம்மா செத்த பிறகு சிகிச்சை என நடிக்கின்றனர் என எதிர்தரப்பினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையான தொண்டன்
அம்மாவின் உண்மையான தொண்டனான என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அது போல என் தாய்க்கு நிகராக நான் நினைக்கும் பொதுச் செயலாளர் சின்னம்மா மீது பழி சுமத்துவதை என்னால் தாங்க முடியவில்லை" எனவே நீங்களும் பொதுச் செயலாளரும் என்னை மன்னித்து விடுங்கள் என வெற்றிவேல் கூறினார். அதன் பிறகு தேர்தல் ஆணையமும் இந்த ஆணையமும் ஒரே நாளில் 20.11.17 மேற்படி ஒரே விஷயத்தில் இரண்டு புகார்களை இரண்டு காவல் நிலையங்களில் வெற்றிவேலுக்கு எதிராக புகார்களை தாக்கல் செய்தன. அதன்பிறகு வெற்றிவேலும் டிடிவி தினகரனும் தத்தம் வசம் இருந்த பென் டிரைவ்களை இந்த ஆணையம் அவர்களுக்கு வழங்கிய சம்மன் அடிப்படையில் வழக்கறிஞர் மூலமாக இந்த ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

வீடியோ வெளியான செய்தி
வீடியோ வெளியான செய்தி தெரிந்த உடன் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஆனாலும் அதன் பின்னர் செய்திகள் மூலமாகவும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் அக்காவின் மரணத்தை கொச்சைப்படுத்தி வந்த நபர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட தமிழக மக்களின் மன ஓட்டத்தையும் உணர்வுகளையும் நான் அறிந்து என்னை சமாதானம் செய்து கொண்டேன். ஆனாலும் அக்கா நைட்டியுடன் உள்ள வீடியோ வெளியானது எனக்கு வருத்தமே. என்னை பொருத்தவரையில் அது அக்காவுக்கு தரும் சிகிச்சை தொடர்பானவற்றை அக்காவே எடுக்க சொன்ன அக்கா பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட வீடியோக்கள், நான் எந்த சூழலிலும் அந்த வீடியோக்களை வெளியிட்டிருக்க மாட்டேன். அக்கா நைட்டியுடன் இருந்த வீடியோ பொதுவெளியில் வெளியானது எனக்கு வருத்தமாக இருந்தாலும் அக்கா மரண விஷயத்தில் களங்கம் ஏற்படுத்திய நபர்களின் முகத்திரையை உரித்த வகையிலும் அக்கா அவர்களின் ஆன்மா கட்டாயம் சந்தோஷப்படும் என்றே நான் நம்புகிறேன். இவ்வாறு ஆணையத்தில் வாக்குமூலத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications