ஐயோ.. பழி போடுறாங்களே.. அதிர்ந்த சசிகலா.. "ஜெயலலிதா வீடியோவை ரிலீஸ் பண்ணிடுங்க".. பரபரப்பு முடிவு?
சென்னை: ஜெயலலிதா மரண வழக்கில் சசிகலா மீது நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. சசிகலா தரப்பை இந்த விசாரணை அறிக்கை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி அறிக்கையில் பல இடங்களில் தனக்கு எதிராக கருத்துக்கள், ஆதாரங்கள் வைக்கப்படும் என்பதை சசிகலா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி மொத்தமாக நமக்கு எதிராக மிக கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு இருக்கிறதே என்று சசிகலா தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம்.
இதெல்லாம் தாண்டி நேற்று இந்த அறிக்கை வந்ததும், அந்த அறிக்கையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இறையன்பு
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் இந்த ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இந்த ஆணைய அறிக்கை தற்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

விசாரணை
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்த ஆறுமுகச்சாமி ஆணையம், ஜெயலலிதாவின் இறப்புக்கு சசிகலாதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில்தான் இது குறித்து நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சசிகலா. அதில், ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரிசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என் அக்கா, நம் இதயதெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

பழி
என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

என்ன நியாயம்?
இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்று சசிகலா காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கேள்வி மேல் கேள்வி
இதற்கிடையே, தன் மீதான ஆணையத்தின் பரிந்துரைகளும் குற்றச்சாட்டுகளும் புணையப்பட்டவைகள் என்பதை அம்பலப்படுத்த சில வீடியோ ஆதாரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார் சசிகலா என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆணையத்தின் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆணையத்தின் பரிந்துரையின் மீது விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, அரசாணையை பிறப்பித்திருக்கிறார் இறையன்பு. இந்த அரசாணையின் படி, எப்படிப்பட்ட விசாரணையை திமுக அரசு நடத்துகிறது என்பதையொட்டி, சம்மந்தப்பட்ட ஆதாரங்களை வெளியிட தீர்மானித்துள்ளார் சசிகலா.

வீடியோ
ஏற்கனவே ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போதே அவர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தன. அப்போதே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் ஜூஸ் குடிக்கும் வீடியோவை சசிகலா வெளியிட்டார். அதேபோல்தான் தன் மீது இருக்கும் நியாயங்களை வெளிப்படுத்தும் விதமாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது எந்த ஆதாரங்களையும் வெளியிட வேண்டாம் என்று அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தியுள்ளனராம். விசாரணை போலீஸ் கைக்கு போனால் அப்போது வெளியிடலாம் என்று சசிகலா திட்டமிட்டு உள்ளாராம்.












Click it and Unblock the Notifications